Monday, April 23, 2012

மற்றும் ஓர் வசந்த மாலை நேரம் .
மூன்றாம் தளத்தின் வெட்ட வெளி .
இதமான தென்றல் பதமாக வீசுகிறது.
வானின் கவிழ்ந்த நீலக் கோப்பையில் துல்லிய வெண் மேகங்கள் கொலுபொம்மைகள்போல்.
மேற்கு வெள்ளிக் கூரைகளை அகற்றித் தங்கத் தகடுகளை வேய்ந்து கொண்டு இருக்கிறது .
' தியானம் செய் ,தியானம் செய் ' என்று என்னுள் ஏதோ தூண்டுகிறது .
என் நடை நிறுத்தி ஓர் புள்ளியில் சிலையாகிக் கண்கள் மெல்ல மூடுகிறேன் .
காற்றின் துள்ளலும் ஆனந்தமும் என்னைச் சிலிர்க்க வைக்கின்றன .
என் ஆடைகள் காற்றின் கைபிடித்து குத்தாட்டம் போடுகின்றன .
என் நெஞ்சின் மீது ஒன்றன்மேல் ஒன்றாக உள்ளங்கைகளை விரித்துப் படர விடுகிறேன் .
என் உட்பார்வை என் கபாலம் துளைத்து விண்ணுள் பயணிக்கிறது .
கடவுளை , அந்த மகாசக்தியை ,அந்தப் பேரமைதியை ,கருணை வடிவைத் தேடி அலைகிறது.
காண இயலாது தவிக்கிறது .
உள்வாங்குகிறது .
வெளிப் பயணம் செய்வதேன் , முட்டாளே ! உன்னுள் உள்ளவனைக் காண உட் பயணம்தானே தேவை ; அடிக்கடி அறிவுறுத்தப்படுவது மறுபடி செவியில் பறை அறைகிறது .
ஆனால் ,அழுக்கு நிறைந்த என்னுள்ளா அச்சக்தி இருக்கக் கூடும் ?
முடியாது என்று மனம் அடித்துச் சொல்கிறது .
மறுபடி விண் பயணிப்பு .
எதற்கு ?
என்னையே நம்பி இருக்கும் ஓர் உயிர் தனியே மனச் சிக்கலில் எங்கோ தவிக்கிறது .
அந்த உயிர் அமைதியும் நலமும் உற்சாகமும் பெறவேண்டும் .
அதுவும் இன்றே , இப்பொழுதே .
அந்த உயிரின்  நிழலே எங்கள் மகிழ்ச்சி .
நெடிய பெருமூச்சு உயிர்க்கிறேன்.
அந்த மகா சக்தியை நெருங்கி விட்டதுபோல் ஓர் உணர்வு ; அதுவேகூடப் போதுமானது.
என்னை நிசப்தமாக்குகிறேன்.
சிறு ஒலியும் பெரிதாகக் கேட்கிற நிலை .
ஓ , மாசக்தியே ,எல்லாம் வல்ல தாயே ,அந்த உயிரைக் காப்பாற்று ; அமைதியும் வலிவும் அழகும் உற்சாகமும் அதற்கு அருள் .
திரும்பத் திரும்ப இதை ஒன்றையே மனம் கனிந்து, நெகிழ்ந்து , கரைந்து , தாழ்ந்து ,பணிந்து ,மெலிதாய் ,உரக்க என்று பல வடிவுகளில் பாதங்களில் வைக்கிறது.
மாசக்தியே ,அவ்வுயிர்பால் உன் விழி திருப்பி கருணை இறக்கு.
சிலநிமிடங்கள் .
மனம் சற்று அமைதி கொள்வதாய்த் தெரிகிறது.
விழி பூக்கிறேன்.
மேற்கில் பொன் ஆற்றில் சூரியப் பூ பெரிதாகி வேறு திசையில் முகம் திருப்பிக் கொள்கிறது .
என்னைப் போலவே பறவைகளும் மௌனமாய் ;
என் வளை என்னைக் கூப்பிடுகிறது ;
மற்றொரு வசந்த மாலையிடம் விடை பெறுகிறேன் .
---சந்திர கலாதர் [ 23. 04. 2012 / திங்கள் /சித்திரை 11 ]

No comments:

Post a Comment