Sunday, April 8, 2012

ஒரு அனுபவம்
&
பௌர்ணமி நாளன்று சரியாக ஆதவன் மறையும் வேளை
கிழக்கே பால்நிலவு நிறைவாய் எழும்--.
காலையில் சூரியன் எம்மூலையில் முளைத்தானோ
அதே புள்ளியில் விழிகளைப் பாய்ச்சிக் காத்திருக்கிறேன்;
சந்திர மலர்வை அதே நொடியில் கண்டு களித்தாக வேண்டும்-
மாலை ஆறைத் தாண்டி விட்டதே ; ஏன் ? ஏன் ?
மனம் தவிக்கிறது ; மேகக் கோட்டைகளும் இல்லையே ?
ஏமாற்றத்தில் ,தொலைத்த குழந்தையைத் தேடும் பாசத் தாய்போல் பரிதவித்து ,
தலை திருப்புகிறேன் கிழக்கையே அலச -
அட ,சற்றுத் தென்புறமாய், பூத்துப் பத்து நிமிஷங்கள் ஆனதால் ,
வானில் தவழ்ந்து ஏறி ,அட்டகாசமாய் எனைப் பார்த்துச் சிரிக்கிறது .
என் கணக்கு தவறானது ;
சித்திரா பௌர்ணமி அன்று உனை ஒரு கை பார்த்துக் கொள்கிறேன் என்று
எனக்குள் சொல்லிக் கொள்கிறேன் .
&
நிலவு , அதுவும் , முழு நிலவு , அதுவும் வசந்தகாலப் பூ நிலவு --
எவ்வளவு அழகாக இருக்கிறது !
அழகு என்ற வார்த்தையே நிலவைக் குறிக்கப் பிறந்ததுதானோ ?
அழகு எனும் சொல்லே நிலவில் வழிந்த அமுதோ ?
அழகிற்கு எத்தனை வேறு சொற்கள் இருப்பினும்
அழகு எனும் இதனை அழகால் வெல்ல வேறு சொல் உண்டோ ?
மற்ற சொற்கள் கவிஞர்களால் தேடி அலையப்படுவது ;
சாதாரணர்களின் பழகு வார்த்தை அழகுதானே !
நிலவே , உன்னை நிலா என்றாலும் தித்திக்கிறது !
இரவில் மிதக்கும் இனிப்பே !
எத்தனை யுகங்களாய் காதலின் ஊற்றாய் நீ பெருகி இருக்கிறாய் !
காதல் உன் மடியில் தலை சாய்த்துக் கனவுள் கலந்தது ;
இரவுகள் மாயாபுரிகளாய் குளிர் நடம் புரிந்தன --
உழைப்பில் தேய் ! ஒளியில் மிளிர்வாய் !-
என்று சொல்லாமல் சொல்கிறாய்-
காதலின் வரலாறே உன்னில் அடக்கம் !
&
இன்று மாலை ஐந்து மணி --
மேற்கே சுடும் ஒளித் திரவமாய் கொட்டிக் கிடக்கிறது ;
கொதிக்குழம்பை யார் மெல்ல மெல்ல அள்ளிச் சூரிய பாத்திரத்திற்குள் நிரப்புவது ?
கைப்பிடிப்பாய் செங்கதிர் உருண்டை ஆக்குவது ?
கசியும் கதிர்களைத் துடைத்து ஆரஞ்சைப் பூசுவது ?
அப்பளம் இடுவதுபோல் தட்டையாய் பெரிதாக்குவது ?
தொடுவானச் சட்டியுள் பொரிப்பது ?
பின் ஆசையாய் விழுங்குவது ?
&
வசந்த காலம் மொட்டவிழ்க்கிறது -
வசந்தம் என்றாலே மாலைத் துள்ளல்தானே !
கொடிகளில் துணிகள், கோபுரக் கொடிகள் ,மரக் கொத்துகள் ,அணியும் ஆடைகள்
எல்லாம் உல்லாசமாக ஆட்டம் போடுகின்றன
காய்ந்த சுள்ளிகள்போல் தோன்றும் மரக் கிளைகளின் பட்டைகளின்
ஒவ்வொரு நுண்ணிய துளைகளில் எல்லாம் பச்சை ஒளிப்பொறி ;
ஆம், பிஞ்சு இலைத் துளிர்கள் !
மரப்பட்டைக்குள் இத்தனை உயிரோட்டமா இவ்வெரிக்கும் வெயிலில் ...வியக்கிறேன் !
வசந்த மாலை நேரங்கள் சொர்க்கமே !
&
-----சந்திர கலாதர்
08.04..2012 / ஞாயிறு /மாலை 6 மணி

No comments:

Post a Comment