Saturday, November 2, 2013

" பிக்ஷாம் தேஹி ..!"
&
தீபாவளி ...
நம் குழந்தைகள் ...எங்கும் எவரும் புதிதில் புன்னகையில்--
பார்த்தவுடன் மனம் நிறைகிறது ..பின் நிழற்படங்கள்   என நாள் தொடர்கிறது
வெடிக் குப்பைகளின் சிதறல்போல் எங்கும் ' இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ' காற்றில் கணினியில்  இறைந்துகிடக்கின்றன ..
 
ஆனால்  மனதில் ஏதோ விடாது  உறுத்தும் நெருடல் எனக்கு .
மனம் பின்னோக்கி சப்தமின்றி வழுக்கிப் போகிறது .
என் பால்ய முதல்நிலைப் பள்ளிப் பருவம் .....
சின்னப் பருவத்தில் நெஞ்சில் ஆழப்படிபவை அழியாச் சிற்பங்களாகின்றன;
ஆனால் எப்போதும் நம்முடன் அந்தரங்கமாகப் பேசும் ஆற்றல் பெறுகின்றன .
படிந்த நாள் முதல் மடியும் நாள் நொடி வரை நம்மோடு வாசம் செய்பவை .
இதோ காட்சி விரிகிறது --
 
அன்று என் பெயர் சந்திர மௌளி.
 
என் வகுப்பில் முத்துவெங்கட்ராமன் --
என் ஆரம்பப் பள்ளித்  தோழன்...அவன் தம்பி மீனாக்ஷி சுந்தரம் .
அவர்கள் தாய் லலிதா மாமி ...தந்தை திரு. சிவராமன்
நாங்கள் வாழ்ந்த உத்தமபாளையம் [ இப்போது தேனி மாவட்டம் ] அக்ரஹாரத் தெருவில் ஏழைக் குடும்பங்கள் ஒண்டி வாழும் பிறை வீடுகளில் ஒன்றில் அடக்கமாய் வாழ்ந்தனர் .
வறுமை ..வறுமை
தாய் அத்தெருவில் பிராமணர் வீடுகளில் அவ்வப்போது நடக்கும் விசேஷங்களிலோ , திதி எனப்படும் ஆண்டு தவசங்களிலோ அழைக்கப்பட்டு உழைத்து சிறு ஊதியம் பெற்று வருவார்கள் ,.
தந்தையார் பேசி நான் கேட்டதே இல்லை ...
ஒரு ஜீவனால் இத்தனை மௌனம் காக்க இயலுமா என  என் சின்ன வயதிலேயே நான் வியப்பாய் வெளுத்ததுண்டு .
எவர்க்கும் தீங்கிழைப்பவரோ எவரோடும் சண்டை போடுபவரும் இல்லை .
ஏதோ ஒரு பணக்காரர் வீட்டிலோ ,கடையிலோ கணக்கு எழுதி எளிய வருமானம் அடைபவர் .
தெருவில் நடக்கையில் அக்கம் பக்கம் திரும்பாது சற்றுக் கூனல் முதுகினராய் அதே மௌனமாய் ..!
நான் அவரை சந்தித்ததோ பேசியதோ இல்லவே இல்லை
ஆனால் அதுவே இன்று வரை என் மாளாத பெரும் வருத்தம் .
எப்படி நான்கு ஜீவன்கள் நாளை நகர்த்தினார்கள் ?
தாயும் தந்தையும் நல்ல ஆடை அணிந்து நான் பார்த்ததே இல்லை
அப்புறம்தானே அணிகலன்கள் ..கழுத்து மூக்கு மூளிதான்
மஞ்சள் தாலியே வாழ்வின் பிடிப்பாய் ..
இதை எழுதுகையில் நான் சொட்டச் சொட்ட அழுகிறேன் என்பது என் கணினி தலையில் அடித்துச் சத்தியம்
என் எழுத்துக்களுக்கு நான் அழுகிறேனா......என் இயலாமைக்கு அழுகிறேனா ?...அவர்களை என்றும் காணாத தவிப்பில் அழுகிறேனா ?...என்று எனக்கு அடையாளம் காட்டத் தெரியவில்லை .
தாய் லலிதா மாமியின் ஏக்கம் நிறைந்த பசிக்கும் விழிகளின் தாக்கத்திலிருந்து நான் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் தப்பமுடியாது .
மானசீகமாக என் மற்றொரு அன்னையாகவே என் மனதில் வடித்திருந்தேன்
இன்று இதனை ஏற்றிச் சொல்லவில்லை ..அன்றே நான் என்னுள் கரைந்து கொண்டிருந்தேன் .
 
&
 
பள்ளி காலை வகுப்புகள் முடிந்து மணி அடிக்கிறது .
ஒரு மணி நேர இடைவெளி இருக்கும் .
எல்லோரும் பள்ளி வாசல் பீறிட்டு 'ஹோ ' விட்டு வீடு பறக்கிறோம் .
வந்த சிறிது நேரத்தில் தட்டு வைக்கப்பட்டு அன்னை பரிமாறுகிறார்கள் எங்களுக்கு .
 
அப்போது வாசலில் ---
" பிக்ஷாம் தேஹி '...என்ற தாழ்ந்த குரல்
இதற்கு ' பிச்சை இடுங்கள் ' என்ற இரக்கமற்ற பொருள்
கண்ணியமாகச் சொன்னால் ' அன்னம் இடுங்கள் ' என்றோ அல்லது ' உதவி செய்யுங்கள் ' என்றோ கொள்ளலாம்
அந்தக் குரலுக்குச் சொந்தக்காரன் என் நல்ல நண்பன் ...என் அருகில் அமர்ந்திருப்பவன் ..முத்துவெங்கட்ராமன் .
இடுப்பிலே ஒரு முண்டு ..குறுக்காய் ஒரு பூணூல் ..நெற்றி நிறைய முப்பட்டையாய் திருநீறு
தீச்சட்டி ஏந்துவதுபோல் ஒரு துணியால் மூடிய பாத்திரம் .
தலை குனிந்து நிற்கிறான்
அம்மா அவனை கதவு திறந்து கூடம் அழைக்கிறார்கள் .
உள்ளே சென்று ஓர் தட்டில்  அன்னம் எடுத்து வந்து அதில் சேர்க்கிறார்கள் .
எங்கள் கண்கள் சந்திக்கின்றன ஒரு சில நொடிகள்
அவன்  விழிகளில் பொறாமை இல்லை ...ஏக்கமும் இல்லை .
பழகிப் போனது இதுதான் வாழ்க்கை என்று ..ஏற்றுக் கொண்டு விட்டனன் .
ஆனால் நானோ ?
ஏனிந்த ஏற்றத் தாழ்வுகள் அட இறைவா என்று என்னுள் எரிகிறேன்
ஒவ்வொரு நாளும் இது தொடரும் ..
அவன் என்றாவது வராவிட்டால் அன்று என் மனம் படும் பாடு !
 
&
 
காலம் இடைநிலைப் பள்ளியில் எங்களைப் பிரித்து விட்டது
ஏழ்மையால் படிக்கவில்லையோ ?
ஏழ்மை அவனை ஏதோ வேலையில் தள்ளி விட்டதோ என்னவோ .
 
&
 
நான் படித்து வேலையில் எங்கே அலைந்தாலும் முத்துவெங்கட்ராமன் என் மன மூலையில் !
பல ஆண்டுகளுக்குப் பின்தான் உத்தமபாளையம் என்னால் செல்ல முடிந்தது .
நான் அங்கு செல்ல எண்ணியதற்கும் அவன் ஒரு காரணமாவான் .
அவன் தம்பி அவ்வூர் ஞானாம்பாள் கோவிலில் ஒரு அர்ச்சகராக இருந்தான் என்று இடையில் யாரோ சொன்னது ஒரு காரணம் .
அவ்வீதி வழி சென்றேன் ..அந்த 'ஸ்டோர் ' என அந்த குடித்தனங்களை அன்று அழைப்பர் ..அதையே காணோம்
வேறொன்று மிடுக்காய் அங்கே எழுந்திருந்தது
கோயில் சென்றேன் ...அவன் தம்பி பற்றி விசாரித்தேன்
அர்ச்சகர்கள் எவருக்கும் தெரிய வில்லை
காலம் அவ்வூரில் ஓர் ஏழையின் சுவடுகளை அடியோடு அழித்து விட்டிருந்தது
 
&
 
காலமே ! நீ என்னிடம் தோற்பது உறுதி
என் முத்துவெங்கட்ராமன்  என் இறுதி மூச்சு வரை என்னுடன் இருப்பான் .
காற்றே !
என் தேடலின் குரலை எங்கிருப்பினும் அவனிடம் சேர்ப்பாய் !
அவனிடம் பேச வேண்டும் !
என்னால் முடிந்தது உதவ வேண்டும் இன்றாவது
அவன் சந்ததிகளுக்காகவாவது .
 
---சந்திர கலாதர்
03.11.2013 / ஞாயிறு / ஐப்பசி 17 / காலை 9.30 மணி  
 
இந்த என் பெரிய அக்காவின் திருமணப் போட்டோ ...அதில் முகம் காட்டி ...இன்று  என் நினைவிற்காக அன்று நின்றானோ என்னவோ தெரியவில்லை ..அவன்தான் என் எளிய நான் தேடும் நண்பன் முத்து வெங்கட்ராமன்