Monday, November 19, 2012

 
ஒரு முதிய மரம் அலுத்துக் கொண்டது --
 
" வயசாகிப் போச்சு
 
வெயில் மழை காத்து எதுவும் தாங்க முடியல
 
மூட்டுக்கு மூட்டு ,கிளைக்குக் கிளை வலிக்குது
 
பறவைகளைச் சுமக்கிறது கூடச் சிரமமா இருக்கு
 
அப்பறம் எங்கே காய் கனி சுமக்கறது ?
 
அடிபடறது போ ?
 
காலேல தல விரிக்கறதுக்கே சோம்பலா இருக்கு
 
பாரு தலைவேற நரைச்சுப் போச்சு
 
கொட்டியும் போச்சு
 
பிள்ளைகுட்டின்னு சுத்தி எத்தனை இருந்து என்ன சொல்ல ?
 
ஏதும் சீந்தறது இல்ல..
 
ஒரு புயல் வந்தாப் பரவால்ல போலருக்கு
 
அப்பாடான்னு பெருசா ஒரு கூச்சல் போட்டு விழுந்துடலாம் போலருக்கு.
 
பாத்ததெல்லாம் போதும் சாமி
 
என்னிக்கு என் கணக்கு முடிப்பானோ ..தெரியலையே
 
என்ன சொல்லி என்ன ?
 
தற்கொலை பண்ணிக்கலாம்னு விழப் போனாலும்
 
இந்த மண்ணுக்குள்ளேந்து ஆச வேர் விடமாட்டேங்குது
 
உஸ் ..உஸ்ஸ் ..உஸ்ஸ் ! "
 
 
பக்கத்து இளைய மரம் -
 
 
" ஏன் பெருசு இத்தனை அலுப்பு ?
 
உன் வயசுக்கு நல்லாத்தான இருக்க ..! " என்றது
 
 
 
பெருசுக்கு இப்போ பாராட்டுல இளமை திரும்பிடுச்சி
 
 
" போடா போக்கத்த பயலே
 
உன் வயசுலே எந்தக் காத்துக்கும் அசரமாட்டேன்
 
உடம்பையே வில்லா வளைப்பேன்
 
தரைய உச்சாணிக் கொப்பால முத்தம் குடுத்து
 
அம்பா மேல வருவேன்
 
புயலு கூட அப்பால மருவாதையா ஒதுங்கிப் போகும்
 
உடம்பெல்லாமே பூவா , காயா ,கனியா
 
தேனடை மாதிரித் தொங்கும்
 
பசங்க கல்லைத் தூக்கறதுக்கு முன்னயே
 
தலய சின்னதா ஒரு சிலுப்பு சிலுப்பி
 
கீழ கொட்டிப் பரப்பிடுவேன்
 
பசங்கல்லாம் மடிதாங்காம அள்ளிக்கிட்டு
 
நல்ல மரம்டா ன்னுட்டுப் போவானுங்க -
 
இதைச் சொல்ற ,
 
பத்தாயிரம் பறவைங்க கூடி ஆடி
 
ஒரே சந்தோஷமா விளையாட்டும் கேலி கூத்துதான்
 
அந்த பாட்டுக் கச்சேரி ஓயவே ஓயாது போ !

அந்த சங்கீதம் வேற
 
இப்பவும்தான் சுத்திக் கார்போற இரச்சல்
 
ஒய்வு ஒழிச்சல் இல்லாம ''
 
நம்ம பேசற சத்தம் நமக்கே கேக்காம காதே போயி ..
 
அப்போல்லாம் ஒண்ணுரண்டு பஸ்சு வரும்
 
'பாம் பாம்'ன்னு ஊதிக்கிட்டு
 
அது கேக்கறதுக்கே சந்தோஷமா
 
நம்ம வீட்டுப் பிள்ளைங்க வர்ற மாதிரி ..
 
இப்போப் பார் மேலயே கறுப்பாப் போச்சு
 
புகை அடிச்சு அடிச்சு
 
நாம பச்சைங்க்றதே மறந்து போச்சே
 
போதாதுக்குத் தூசி புழுதி வேற -
 
அப்பல்லாம் நம்ம மேல மஞ்ச குங்குமம் தீட்டி
 
சாமி கணக்கா கும்பிட்டு வேண்டிகிட்டுப் போவான்
 
இப்ப விழிப்பா இருக்கும்போதே
 
ஒரு கையை வெட்டி வண்டில போட்டுப் போயிடறானுங்க
 
இல்லாட்டி குப்பைய அடிலபோட்டுத்
 
தீயை வச்சிட்டுப் போறானுங்க
 
இல்லாட்டி ரோடு போடறேன்னுட்டு
 
வேரைச் சுத்தித் தாரை ஊத்திட்டு
 
தாகத்துக்கு மழைத் தண்ணி கூடக் குடிக்க விடா
 
சாக அடிச்சு அதைச் சாக்காக்கி
 
வெட்டி வித்துடறான்
 
ஒண்ணொன்னாக் காலி பண்ணி
 
பேசறத்துக்கு பக்கத்துல சாதி சனமே இல்லாமப் பண்ணிட்டான்
 
பாரு சோத்துக்கு செத்து எலும்பா
 
நீங்கள்ளாம் இளவட்டமா ?
 
பாத்து புழைச்சுக்கங்கப்பா !
 
 
இளமரம் நிதர்சனம் கண்டு கேட்டு
 
அசந்துதான் போனது !
 
 
---சந்திர கலாதர்
 
19.11.2012 /திங்கள் / கார்த்திகை 4
 
 
பகல்
 
 S.CHANDRA KALAADHAR

Saturday, November 17, 2012

 
விண் பார்த்தால்....! .
&
 
புலராத மொட்டுக் காலை
 
' ச்ச்சில்' லின் ' கட்டிப் பிடிப்பு
 
கார்த்திகைப் பிறப்பே இப்படி எனின்
 
மார்கழிப் பனிக் கடி எப்படி இருக்கும் ?
 
மொட்டைமாடி -
 
இதற்கு இதுவே பொருத்தம் ;
 
வேறு வார்த்தைகள் அல்ல !
 
கார் நீல வானம் --
 
உச்சிமேடுகளில் பதித்த வைரங்கள் -
 
விண்ணைப் பார்த்தால்
 
என்தந்தையே எங்கும் விண்மீன்களாய் !
 
எவ்வளவு அக்கறையுடன்
 
என் பள்ளிப் பருவத்தில்
 
குளிர் வானில் கும்மிருட்டில்
 
நடுங்கும் நக்ஷத்திரங்களை
 
என் இடுக்கிய விழிப் பார்வையோடு
 
தன சுட்டுவிரல் கோர்த்துக் காட்டி
 
என்னை நண்பன் ஆக்கினார் .
 
" இதோ அந்த வீனஸ் அல்லது சுக்கிரன்
 
விடிவெள்ளியாய் , குத்து விளக்காய் --
 
அதோ பார் --
 
நாய் நக்ஷத்திரம் ' சிரியஸ் '
 
மிக அருகாமை விண்மீன் -
 
அது ஓரியன் எனும் வேடன்
 
இழுத்துச் செல்லும் நாய் ஆகும் !
 
ஓரியன் இடைக் கச்சையில்
 
மூன்று நக்ஷத்ர உடைவாள் --
 
அதோ தெற்கே -
 
அடையாள விண்மீன் தொகுதி
 
'சதர்ன் க்ராஸ் ' சிலுவைபோல்
 
நான்கு நக்ஷத்திரங்கள்-
 
கண்ணுக்கு எளிதில் புலப்படா
 
ஆறு கிருத்திகை விண்மீன் தொகுப்பு .--
 
இதோ வடக்கில் 'க்ரேட் பியர் '
 
ஏழு விண்மீன் தொகுப்பாய் --
 
அதன் முன்பக்க இரு மீன்களை
 
மனதுள் சேர்த்து கீழ் இழுத்துப்போ -
 
தொலைவான் தொடுவில்
 
மங்கலாய் ஒரு நக்ஷத்திரம் ,தெரிகிறதா ?
 
ஊன்றிப் பார் -" என்று என் உயரம்
 
சளைக்காது குனிந்து நிமிர்ந்து
 
அந்த ' போல் ஸ்டார் ' எனும்
 
துருவ நக்ஷத்ரம் பறித்துக் கொடுத்தீர்களே !
 
" அப்பா இது இடம் பெயராது
 
இது வைத்தே மாலுமிகள் தொன்று தொட்டு
 
 
வட திசை கண்டு பிற திசை பொருத்தி
 
கடற் பயணம் செய்தனர் ;
 
அதோடு இந்த அச்சைச் சுற்றியே
 
நமது பூமி சுழல்கிறது
 
அதனால் எல்லா நக்ஷத்ரங்களும் கூட
 
இது அச்சாக்கிச் சுழல்வதுபோல் தோன்றும்
 
அதோ உச்சிவானுக்கு ஓர் கச்சை போல்
 
வழியில் சிந்திப் போன பால் போல்
 
கோடிக் கோடியாய் மாவுச் சிதறலாய் 
 
அதுதான் 'மில்கி வே ' எனும் ' பால் வீதி '--
 
தென்மேற்காய் வண்ணங்களை
 
உமிழ்ந்து பளீரிடுகிறதே
 
அதுதானப்பா 'வேகா ' விண்மீன்
 
தேள்கொடுக்காய் விருச்சிகன்
 
எனும் 'ஸ்கார்பியோ ' தொகுதி

'லிப்ரா ' என்னும் ' துலாம் ' " என்றபடி
 
மார்கழி மாதம் வெவ்வேறு நேரங்களில்
 
அந்த உத்தமபாளையத்து
 
இருள் கிராமத்து வீதியில்
 
ஒளிர் வானத்து அதிசயங்கள் அனைத்தும்
 
பன்னிரெண்டு ராசிக் குழுமங்களும்
 
குழந்தை ஆவலுடன் எனை எழுப்பிக்
 
கற்றுத் தந்த பாடம்தான் மறக்குமா ?
 
உங்கள் அன்புதான் தோற்குமா ?
 
பின்னாளில் நான் படிக்கும் இடங்களில்
 
பணி புரிந்த ஊர்களில் எல்லாம்
 
விண்ணின் வரைபடமும் டார்ச்சும்
 
அருகில் கொண்டு பனித் தூவலில்
 
கோரைப்பாய் மீதில் மல்லாத்தி
 
விண்ணை விழிக்குள் வரைந்து
 
பெயர்தேடித் திரிந்ததெல்லாம்
 
நனைந்துபோன தலையணை மறக்குமா ?
 
மார்கழிகள் தான் மறந்திடக் கூடுமோ ?
 
" அதனால் தானப்பா கண்ணன்
 
மாதங்களில் நான் மார்கழி என்றான் "
 
என்று கற்பித்த தந்தை மறப்பேனோ ?
 
 
---சந்திர கலாதர்
 
18.11.2012 / ஞாயிறு /
பகல் மணி 10.30
--
S.CHANDRA KALAADHAR

Thursday, November 15, 2012


ஐம்புலன்கள் ஐம்பூதமுடன்


அனுதினமும் ஆசையோடு
 
 

பேசும் ஒரு ஊமை மொழி
 
 

எனக்குள் அது ஒரு சுக ராகம்
 
 

எழுதுகையில் புரண்டுவரும் ஜீவ நதி
 
 

என் மொழியும் அதன் மொழியும்
 
 

சங்கமிக்கும் வான்வெளி புனிதத்தலம்
 
 

பார்த்தவுடன் புன்னகைக்கும்
 
 

மெதுமெதுவாய் இதழ் மலர்த்தும்
 
 

இதய மொழிகளையே
 
 

மௌனமாய் அனுப்பி வைக்கும்
 
 

உணர்வுகளைத் தட்டி எழுப்பும்
 
 

சொற்களை அன்பாய் ஊட்டிவிடும்
 
 

அள்ள அள்ளக் குறையாத
 
 

கற்பனைகள் கோடி தரும்
 
 

காற்றாய் ஓடி வரும்
 
 

கன்னத்தில் முத்தமிடும்
 
 

கட்டிப் பிடித்து காதோரம் கிசுகிசுக்கும்
 
 

காத்திருக்கும் ஓரமாய்
 
 

வெண் மேகங்களாய்
 
 

பொதி பொதியாய்
 
 

வண்ணங்கள் பூசிக்கொண்டு
 
 

மங்கலமாய் மனம் கேட்கும்
 
 

பறவைகளைப் பறக்கவிட்டு
 
 

ஆனந்தச் சாரலிடும்
 
 

இரவெல்லாம் எனை காணாது
 
 

காத்திருந்த கண்ணீரை
 
 

பச்சிலை மேல் பொறித்து வைக்கும்
 
 

தன சோகத்தைக் காலை நிலவின்
 
 

முகத்தில் பூசிச் செல்லும் ..
 
 

இயற்கையை எனக்கெனவே
 
 

படைத்தானைப் பணிகின்றேன் !
 
 
 
 
 
 

---சந்திர கலாதர்
 
 

16.11.2012 /வெள்ளி /கார்த்திகை 1
 
 

நண்பகல்
 
 

-
 
S.CHANDRA KALAADHAR

Tuesday, November 13, 2012

வயதின் நடை தளரத் தளர

பதற்றம் ஏதோ தொற்றிக் கொள்கிறது ---

உறவின் பசுமை தேடித் தவிக்கிறது

உதைத்த பிரிவை எட்டி அழைக்கிறது

இழந்தது வேண்டும் என்று கூச்சலிடுகிறது

தனிமை தனிமை என்று ஓடிய மனமும்

அண்மை நாடித் தூது விடுகிறது

ஒற்றைப் பருந்தாய் உலவிய எண்ணம்

தாழப் பறக்கும் புறா என்றானது

புதைந்த பாரம்பரியம் புதுப்பித்திடவே

கவனத்துடன் பதியம் போட்டது

சொந்தக் காற்றின் நறுமணம் நுகர

இல்லக் கதவை முழுதாய்த் திறந்தது

எல்லோரையும் அன்பால் அணைக்க

பாசச் சிறகைப் பெரிதாய் வளர்த்தது ..

------சந்திர கலாதர்

14.11.2012 / புதன் / ஐப்பசி 29

காலை மணி 8.

Sunday, November 11, 2012

எத்தனை முறை சொல்லிக் கொடுப்பது ?
அன்பாய் அடுத்து சற்று உரத்து
பின் கடுமையாய் பின் சின்னதாய்ப்
பின் மண்டையில் செல்லத் தட்டுத் தட்டி --
எத்தனை முறைம்மா சொல்வது ?
நெருஞ்சி முள் ஒளி அம்புகளாய்
'சுடீர் சுடீர் 'சிறு வெடிப்புகளாய்ப்
பூத்துச் சிதறி அச்சுறுத்தும்
கம்பி மத்தாப்புகளை முழுக் கை நீட்டி
உயர்த்தித் தொலைவாகப் பிடிக்கணும் என்று
எத்தனை முறை சொல்வது கண்ணா ?
' சுர்ர் ' என்று நுனி ஏறிப் புகை கக்கி
ஒளி கக்கிப் பின்னேகி மங்குதற்குள்
உன் கரம் தாழ்ந்து இரண்டாகக் குறுகுவதேன் ?
அச்சத்தில் உடல் நெளிவதும்
கண் இடுங்குவதும் கை உதறுவதும்
பாதியிலே ' தொப் ' பிடுவதும்
ஏற்றுகிறேன் பேர்வழி என்று
தீபம் அணைப்பதுவும்
பொறுமை இழப்பதுவும்
அடிக்கடி பதறி உள் ஓடி
கை இருப்பு பார்ப்பதுவும்
உன் பின்னாலே விடாது உளறியபடி
நான் வீணே அலைவதுவும் --
அப்பாடா காயங்கள் இன்றி
ஓய்ந்ததடா பண்டிகை நாள் என்று
கிறங்கி நான் நாற்காலி சாய்வதுவும்--
இதுதான் ஒவ்வொரு வீட்டிலும்
தவறாத தீபாவளிக் காட்சியடா !
&
----சந்திர கலாதர்
12.11.2012 / திங்கள் / ஐப்பசி 27
காலை மணி 11.

S.CHANDRA KALAADHAR

சில மௌனங்கள்

&

சில மௌனங்கள்
அழகானவை -
குழந்தையின் !

சில மௌனங்கள்
தவிப்பூட்டுபவை --
காதலின் !

சில மௌனங்கள்
திகிலூட்டுபவை--
அயோக்கியனின் !

சில மௌனங்கள்
ஏமாற்றுபவை --
அரசியல்காரனின் !

சில மௌனங்கள்
பொசுக்குபவை --
காமாந்தகனின் !

சில மௌனங்கள்
எரிச்சலூட்டுபவை --
கோழையின் !

சில மௌனங்கள்
அற்புதமானவை --
படைப்பாளியின் !

சில மௌனங்கள்
நெகிழ்விப்பவை --
பெற்றோரின் !

சில மௌனங்கள்
புரியாதவை --
கடவுளின் !

ஆனால் -
மௌனங்கள் எல்லாமே
உள்ளோசைக் கோலங்கள் !

---சந்திர கலாதர்

11.11.2012 / ஞாயிறு
ஐப்பசி 26 / இரவு மணி 9.

--
S.CHANDRA KALAADHAR

Thursday, November 8, 2012

புல்லாங்குழலா நீ ,கண்ணா ?

&

மாதங்களில் நான் மார்கழி என்றாய் கண்ணா
 
இசைக்கருவிகளில் எது என்று ஏன் சொல்லவில்லை ?
 
ஓஹோ உன் இதழிலும் கரத்திலும் அது குறித்தனையோ ?
 
புல்லாங்குழல் ஏன் தேர்ந்து எடுத்தாய் ?
 
நதியோரம் பசுமைகளில் ஆவினத்தொடு அலைவதாலா?
 
கரையோரம் நாணற்குழல்கள் நிறைந்து கிடப்பதாலா ?
 
இசைக்கு அதை அழைப்பதற்கும் எளிது என்பதாலா?
 
தொலைவுகளில் மேய்கின்ற ஆவினம் மெய்மறப்பதற்கோ ?
 
எண்ணி மருகும் கோபியரை இசைகட்டி இழுப்பதற்கோ ?
 
என்ன நாதம் இது நெஞ்சு துளைப்பதுவாய் !
 
என்ன கம்பீரம் மாவீர நடையாய் !
 
என்ன உருட்டலிது நதி நீர்ச்சுழியாய் !
 
என்ன மழலை இது இதயம் கொஞ்சுவதாய் !
 
வேறு இசைக்கருவி எது இதன்முன் நிற்கும் ?
 
இரு கைப்பிடியுள் அடங்கி இதழடி அமர்ந்து
 
உயிர் நாதம் உட்புகுந்து விரல் நடனம் ஆடிடவே
 
கூர் இசையாய் காற்றின் முதுகேறி
 
எண்திசையும் ஆனந்தக் களிப்பாக
 
கண்கள் செருகிட கால்கள் பின்னலிட
 
தலை ஆட்டம் போட்டிட மனம் மயங்கிடவே
 
இசைமையம் தேடி இதயங்கள் ஓடிவர
 
புல்லாங்குழலில் உன் இசையில் கண்ணா
 
துன்பங்கள் நைந்திடவே உனையே கண்டுகொண்டோம் !
 
 
-----சந்திர கலாதர்
08.11.2012 / வியாழன் / ஐப்பசி 23
பிற்பகல் 1 மணி

S.CHANDRA KALAADHAR

Monday, November 5, 2012

அவர்கள் எல்லாம் மரங்களை ,
இயற்கைவிரிப்புகளை
வான விசாலங்களை
மலைகளின் பெருமிதத்தை
ஆற்றின் அருவியின் அழகினை
நடந்தபடியே ரசித்தார்கள்
தம் நிழற்படக் கருவிகளுள்
தம்மை முன் நிறுத்தி அடைத்தார்கள்
அவனும் பார்த்தான் நின்றபடி மனம் நிறைந்தபடி--
அவன் எழுதினான் அழகிய கவிதைகளை
அவர்கள் அதைப் பார்த்தார்கள் வியந்தார்கள்
தங்கட்கு இவன்போல் எண்ணங்கள் ஏன் கசியவில்லை ?
'ஆஹா எப்படி இப்படி...? '
அவன் சொன்னான்--
" நீங்கள் பார்த்ததே நானும்
நீங்கள் காட்சியின் விளிம்பு வடிவையே கண்டீர்கள்
நான் மரம் பார்த்ததோடு
கிளை வளைவுகளை
இலைத் தொகுப்புகளை
ஒரிலைமட்டும் இலை நரம்புகள்
பின் பூக்கள் அதன் இதழ்கள் மகரந்த ஊசிகள்
வண்ணச் சிதறல்கள் என்றெல்லாம்
தனித்தனியாய் அணுகினேன் ;
அவற்றோடு காதோடு பேசினேன்
அன்பாய் நீவினேன்
நேசிக்கிறேன் என்று மெலிதாய்ச் சொன்னேன்
முழுதாய் எனை நம்பின
தம் ரகசியம் பகர்ந்தன
சொற்களும் தந்தன
ராகமும் இசையும் தாளமும் கூடக் கொடுத்தன
எனக்கு மட்டும் அல்ல ;
எல்லோர்க்கும் பாகுபாடின்றித் தருவன
அண்டிப் பாருங்கள் ஒன்றிச் சேருங்கள்
மனவளம் ஏற்றாப்போல்
ஒருவற்குக் கவிதையாய் ஒருவர்க்கு ஓவியமாய்
ஒருவர்க்குச் சிற்பமாய் என
அள்ளி வழங்கும் பாரீர் என்றவன்
மறு காட்சியுள் வீழ்ந்தான் .
----சந்திர கலாதர்
05.11.2012 / திங்கள் / ஐப்பசி 20
இரவு 9 மணி

--
S.CHANDRA KALAADHAR

Sunday, November 4, 2012

'ல'கர '...ஹா'கார இன எழுத்தொலிகளே மிகுந்து 'அக்குபர்' என்ற தனி வார்த்தை நின்று நிதானமாய் 'இ'கர '..அ'கர ஒலிகள் விரவி
அந்தி வேளைகளில் பள்ளிவாசல் கூர் கோபுரங்களில் பிறந்து உச்ச ஸ்தாயியில் தேன் நகர்வாய் காற்றில் பரவிவரும் அந்தத் தொழுகை அழைப்பு
ஏதோ விவரிக்க முடியாத தவிப்பை என்னுள் தினமும் ஏற்படுத்துகிறது .
நடந்துகொண்டே படிக்கும் என் உலா உறைந்து போகிறது ;
புத்தகம் தானே மூடிக் கொள்கிறது .
எதிர்பாராத் திருப்பங்களும் வளைவுகளும் உயர்ந்தெழுதல்களும் தாழ் சறுக்கல்களுமான ராகப் பயணம் ....ஒரு நொடி அழுகைபோல் ....ஒரு நொடி பரவச விம்மல்போல்...
வான் துளைத்து இறையடி வீழ்தல்போல்....
இப்போது முடியுமா அடுத்த அடி வருமா என்ற திகைப்பு எப்போதுமாய்
ஆனால் பட்டென்று முடிந்துபோய் ஒரு வெற்றிடம் வானைச் சூழ்வதாய் உணர்கிறேன் .
இது வான் எழுகையில் நான் நானாக இல்லை .
வான் மிதப்பது போல் உணர்கிறேன் .
இதேபோன்றுதான் தோப்பு துரவுகள் நிறைந்த சிற்றூர்களில் மரங்களை ஊடுருவி அலைந்து வரும் ஆலயமணி நாதங்களும்
என்னுள் அசாதாரண அதிர்வுகளை ஏற்படுத்தி விடுகின்றன.
தெய்வ சந்நிதானத்தில் நான் மட்டும் மங்கிய தீப ஒளியில் மயங்கி நிற்பதுபோல் உணர்கிறேன் .
என் தலைக்குள் கட்டப்பட்டிருக்கும் அப்பெரு மணியை என் கரங்களால் இழுத்து அடித்து ஒலிப்பதாய் ஒரு பிரமை
அல்லது ஒரு பிரேமை .
மனம் கூட இந்த நேரங்களுக்காக ஏங்குகிறது.
---சந்திர கலாதர்

--
S.CHANDRA KALAADHAR
அது ஒரு தனி உலகம் -
மொழிகளில்லா ஒலி உலகம்--
எட்ட நின்று ரசிப்போர்க்கு
சுவை பொழியும் உலகம்
மனம் இளக்கும் உலகம் --
எதை வேண்டி அழுகை ஒலி ?
' ங்கா ..ங்கா ..ங்கா ..ங்கா '
அலை அலையாய்
விடாது தணியாது பரிதாபமாய் --
' ஓவ் ..ஓவ்வ் ..ஓவ் ..ஓவ்வ் '
பதில் ஒலியாய்
இணை ராகத்தில்
இணக்கமான ஓர் சுக லயத்தில் --
அழுகை நிற்பதும் இல்லை
பதில் தேய்வதும் இல்லை--
தூக்கிக்கோ என்று கேட்கிறதோ ?
பசிக்குது என்று தவிக்கிறதோ ?
ஈரம் ஊறுகிறேன் சொல்கிறதோ ?
வியர்க்கிறது என்று கதறுவதோ ?
எறும்போ கொசுவோ
கடிக்கிறது என்று அழுகிறதோ ?
எத்தனையோ கேள்விகள்
மிதப்பனவே என் மனதில் !
என்ன கைவேலையோ
தனித்த அத்தாய்க்கு --
' ஓவ் ஓவ் ' இடை இடையே
' என்னடா செல்லம்
என்னடா கண்ணு
ஏண்டாம்மா வேண்டாம்மா
அம்மா வந்துட்டேண்டீ
யார் அடிச்சது என் ராஜாவை ? '
என்பனபோல் விரவல் நிரவல்கள் !
அதற்கென்ன புரிந்தது ?
இவளென்ன புரிந்து கொண்டாள் ?
குழந்தை அழுகை
நெஞ்சைக் கரைக்கிறது -
அழுகை மெல்லத் தேய்கிறது
தாய் அதனை அணைத்தாளா?
அலுத்துப்போய் அதுவே
அழுத களைப்பில் உறங்கிற்றோ ?
பச்சிளம் பிஞ்சு மொழிக்கென்று
இறைவா ஓர் நிகண்டு தாராயோ ?
-----சந்திர கலாதர்
05.11.2012/ திங்கள் /ஐப்பசி 20
காலை 8 மணி
தென் திசை பார்த்து நின்றாள்

வான் பார்த்த மாடம் மீது--

முகமோ கீழ்த்திசை திரும்பிற்று
...
அடர் கூந்தலோ தோள் வழி

மேற்கு சரிய இறங்கிற்று

வலக்கையில் ஒரு சீப்பு ஏந்தி

வழிசிகை இடக்கை உட்பிடித்து

பொன்னேர் ஒட்டுதல்போல்

தலை நிலத்தை

உழுகிறாள் உழுகிறாள்

உச்சி முதல் நுனி வரை

சலியாது சளைக்காது

ஒய்யார நிலைப்பாட்டில்

முதுகு இப்பக்கமாய்

ஓர் மணி நேரமாய் --

தலை மேடெல்லாம்

ஆழக் கோடுகள்

வாய்க்கால் போட்டிருக்குமோ ?

இன்னமும் திருப்தியில்லை

என்று முடிப்பாளோ ?

பொறுமையின் எல்லையில்

பொருந்தாத நான் !

ஒரு வழியாய் அப்பாடா ---

ஆனால் கூந்தல் கூட்டி

தன் பின்புறம் மிடுக்காய் வீசியவள்

அரைமணி நேரம்

அன்பாய்க் கோதி விட்டாள்

கூந்தல் சங்கு இறுக்கி

சிலமுறை அடித்துக் கொண்டாள் .

முகம் வானம் பார்க்க

கூந்தல் திரட்டிப் பரப்பிக்

காதுமடல் உள்ளனுப்பிப்

பின் நுனி கோதி----.

இருட்டி விட்டது

இவள் எப்போதுதான் அதற்கு

மூன்று கால் தருவாளோ ?

முடுக்கிச் சடை காண்பாளோ ?

---சந்திர கலாதர்

04.11.2012 /ஞாயிறு / ஐப்பசி 19

மாலை 6 மணி .
இவர் கடவுள் அல்லர்

ஆனால் மனிதரும் அல்லர்

கண்களில் அத்தனை கனிவு

...
தாயோ எனின் தாயும் அல்லர்

இவரை நேரில் பார்த்தவன் நான்

அருகில் வியந்தபடி

காஞ்சியில் நடந்தவன் நான்

வேறு எவரும் துறவிகளில்

இவர்போல் ஈர்த்தவர் இல்லை

மெல்லிய சொல் மென் பார்வை

நலிந்த மேனி கனிந்த நடை

புத்தகங்கள் சொல்லும்

இவர்தம் முக்கால சக்திகள்

நான் அறியாததால் ஏற்பதில்லை

இவர் பார்வை படருகையில்

ஓர் நொடி உரசிச் சென்றிடினும் --

அது விடுங்கள் -

இவர் நிழற்படம் பார்த்ததுமே

ஒரு காரணமும் புரியாமல்

கண்கள் உருகிக்

கண்ணீர் திரளுதம்மா !

நம் வஞ்சம் கள்ளம் எல்லாம்

பின்கதவு பார்க்கிறதே !

முன் வாயிலில் அடக்கமாய்

பண்பு குனிந்து வருகிறதே !

மெத்தப் படித்த மதாதிபதிகள்

விழிகளில் விளைகின்ற கர்வம்

இவர் கண்ணுள்ளே காண்பதில்லை

இவர் சொற்களிலும் எளிமை

ஒரு தாயின் அன்புச் சாரல்

இவர் ஒரு குழந்தைத் துறவி

ஒரு துறவிக் குழந்தை !

எண்சாண் கிடையாகப்

பாதம் பணிகின்றேன்!



---சந்திர கலாதர்

04.11.2012

ஞாயிறு /பிற்பகல் 3 மணி

ஐப்பசி 19
--
S.CHANDRA KALAADHAR
See more