Saturday, November 26, 2011

words

வார்த்தைகள்
 
&
 
வார்த்தைகள் வலிமையானவை
 
வார்த்தைகள் உக்ரமானவை
 
வார்த்தைகள் தீப்பிழம்பானவை
 
வார்த்தைகள் புயலானவை
 
சொற்கள் செதுக்குபவை
 
சொற்கள் சாம்பலாக்குபவை
 
சொற்கள் சபிப்பவை
 
சொற்கள் மென்மையானவை
 
வார்த்தைகள் வருடுபவை
 
வார்த்தைகள் தென்றலானவை
 
வார்த்தைகள் பாத ஆழங்களிலும் எரிந்து எழுபவை
 
வார்த்தைகள் இதய ஆழங்களிலும் மலர்ந்து மணப்பவை
 
மொழிகள் விழிநீர் விளைப்பவை
 
மொழிகள் மௌனிப்பவை
 
மொழிகள் தியானிப்பவை
 
மொழிகள் நம்மையே தாக்குபவை
 
கூரானவை குருடானவை
 
சதிரானவை புதிரானவை
 
வார்த்தை அதிர்வுகள் சர்வ சக்தி
 
உண்மை சாபங்கள் பலிப்பவை .
 
நாவை அடிக்குமுன் உதட்டைக் கேள்
 
உதடு கடந்திட விளைவு உன்வயம் இல் .
 
 
 
------சந்திர கலாதர்

Thursday, November 24, 2011

இவர்கள் வரவும் செலவும் புரிவதில்லை .
 
&
 
இவர்கள் கைபேசிக்களின் புரியா நுணுக்கங்கள் போல்
 
இன்றைய இளைஞர்களின் போக்கும் பேச்சும் -
 
இவர்கள் வரவும் சொல்வதில்லை ;
 
செலவுகளும் அறவே புரிவதில்லை -
 
தனக்கென்றும்கூடக் கணக்கு வழக்கில்லை ;
 
கேட்டுவிட்டால் முகம் முறுக்கிய துணியாகிவிடும்;
 
வார்த்தைகளோ எற்றி உதறிவிடும் -
 
'உப்புக்குச் சப்பாணி நீங்கள் எல்லாம்!' என்று
 
விழிகளின் விளையாட்டு விரைந்து சொல்லும் -
 
இவர்களின் 'பார்முலா ஒன்றின் ' முரட்டு வேகம்
 
பெற்றோரின் வயிற்றில் புளி கரைத்துவிடும்;
 
ஐம்பூதங்களின் ஒரு முரட்டு அசைவினிலே
 
விதியின் விஷமச் சிரிப்பினிலே
 
வாழ்வே வெடிச் சிதறல்களாகி விடும் எனும்
 
சிறு எண்ணமும் கூட இவர்களுள் எழுவதில்லை -
 
பரிசுகள் வாரி வீசுதலில் சுகம் என இவர் மகிழ்ந்தாலும்
 
பெறுபவற்கும் ஏற்பதில் சில கொள்கை வலியுண்டு-
 
அன்பு தோய்ந்த ஓர் பார்வை கனிவான ஓர் மொழி
 
இவைதானே பெற்றோர் நாடும் பெரும் பரிசு !
 
இதுமட்டும் இவர்களுக்கு ஏனோ புரிவதில்லை -
 
வாழ்க்கை செலவிடலில் இவர்கள் தூக்கமில்லை ;
 
இவர்தம் கவலையில் பெற்றோர்க்கும் தூக்கமில்லை !
 
என் பெற்றோரும் இப்படித்தானே நினைத்திருப்பர் ?
 
 
-------சந்திர கலாதர்

Wednesday, November 23, 2011

a golden pen

இருபதாயிரம் ரூபாயில் ஒரு பேனா !
&

பொன்மீது இதுவரை ஆசையே கொண்டேன் அல்லன்

ஒரு மோதிரமும் என் விரல் சுமந்ததில்லை வாழ்நாளில் -

பெண்ணைப்போல் பொன் தண்டவாளம் கழுத்திலே கையிலே

சுமக்கும் பெட்டை ஆண்களைப் பார்த்து நகைப்பதுண்டு-

என்ன நினைத்தானோ என் மகன் ? தண்டிக்க நினைத்தானோ?

எழுதியவண்ணம் எப்போதும் இருக்கிறானே என எண்ணி

"அப்பா ! இதோ என் பரிசு !" என ஓர் சிறு பெட்டகம் தந்தனன் ;

பரிசுகள் மீறிய வயசு மனமின்றி அசட்டையாய்த் திறந்தது;

உள்ளே குள்ளமாய் ஒரே ஒரு பேனா மஞ்சளும் வெள்ளையுமாய் -

வேறு உள்ளே உள்ளதா என மனம் கலைத்துப் பார்த்தது -

அவசரமாய் மகன் அணுகி சிறப்பு மை ஊற்றித் தந்து

"அப்பா ! இதை என் பணத்தை திருப்பித் தருவதுபோல் வேண்டாம் ;

இதன் விலை இருபது ஆயிரம் ரூபாய் ;' வாட்டர்மேன் ' பேனா இது

தங்கம் இழைந்தது ஆசையாய்த் தருகிறேன் " என்றனன் -

அதிர்ச்சியில் இதயம் வெளியில் குதித்து மயங்கிப் போனது ;

இதை நான் கேள்விப்பட்டதுகூடக் கிடையாதே;

இதில் எழுதக் கூட என் மனம் ஏற்காதே ;

ரூபாய் ஐந்தைத் தாண்டி பேனா வாங்கப் பொறாத வயதாயிற்றே !

அவன் கட்டளையில் என் பெயர் எழுதிப் பார்த்ததோடு சரி

பேனாவைப் பெண்ணைப் போல் திரைமறைத்து உள் வைத்தேன்

தங்கமே எனைத் தீண்டாதே என் தவம் கலைக்காதே

என்று சொல்லவா முடிகிறது ? என் தொழில் எழுத்தாயிற்றே !

எழுதினால் சொல் எல்லாம் பொன்னாகவா பூக்கப் போகிறது ?

உள்ளிருப்பது என் ஏழைத் தோழன் வல்லமை 'மை' தானே !

என்றும் போல் என் எழுத்துக்கள் மண் ஈரம் மனஈரம் மலர்த்தும் !

-----சந்திர கலாதர்

Saturday, November 19, 2011

the sun's mischief

சூரியக் குறும்பு

&

பத்து நாட்களாய்ப் பாடிய ராகம் பட்டென நின்றது

மழைக்கே தன் பாடல் அலுத்துப் போனதுவோ !

" காலையில் கதிரவன் கட்டாயம் வருவான் !"-

ஆரூடம் ஒன்றினை வெகு ரகசியமாகக் காதிற்போட்டு

கடுகிச் சென்றது கடுங் குளிர்க் காற்று -

பத்து நாட்களாய் உறங்கிய பகலவன் பளிச்செனக் காலையில்

விழி விழிப்பினை அழகாய் விரித்தான் -

இல்லாத வேளையில் நிகழ்ந்த மாற்றங்கள்

மிக அக்கறையாக ஓர் ஆய்வு செய்தான் -

பெரும் ஏரிகள் விரித்த நீர்ப்பாய்ப் பரப்பினில்

புரண்டு எழுந்து சோம்பல் முறித்தான் -

இருபது ஈர இரவுகள் பின்னே இரத்தம் உறைந்து

உடல் விறைப்பதற்குள் மெல்லப் பகல் வந்தது என

மிக மகிழ்ச்சியில் மலர்ந்த மாந்தர் பலரின் பனிக் கன்னங்களைக்

குறும்பாய்க் கதிரவன் கிள்ளிப் பார்த்தான் -

பொருள் பொதிந்த பார்வை ஒன்றினைக்

கண்களின் சிலிர்ப்பில் சிமிட்டி நின்றான் -

" தண்ணீர்தானே வேண்டி மனுக்கள் விடுத்தோம் --

பிரளய ஒத்திகை பார்க்கவா சொன்னோம் ?

அன்பாய் உன்னைச் சற்றே சபித்தால்

பதவியை விட்டா பதுங்கிடச் சொன்னோம் ?"-

என்றே பலவாய் மாந்தர் புலம்பல் பெருமூச்சுப் புயலாய்ப்

பொங்கித் திரண்டெழ அச்சம் கொண்டே மறுநொடி ஆதவன்

மேகக் குகையுள் ஓடி ஒளிந்தனன் !

------சந்திர கலாதர்