Saturday, November 19, 2011

the sun's mischief

சூரியக் குறும்பு

&

பத்து நாட்களாய்ப் பாடிய ராகம் பட்டென நின்றது

மழைக்கே தன் பாடல் அலுத்துப் போனதுவோ !

" காலையில் கதிரவன் கட்டாயம் வருவான் !"-

ஆரூடம் ஒன்றினை வெகு ரகசியமாகக் காதிற்போட்டு

கடுகிச் சென்றது கடுங் குளிர்க் காற்று -

பத்து நாட்களாய் உறங்கிய பகலவன் பளிச்செனக் காலையில்

விழி விழிப்பினை அழகாய் விரித்தான் -

இல்லாத வேளையில் நிகழ்ந்த மாற்றங்கள்

மிக அக்கறையாக ஓர் ஆய்வு செய்தான் -

பெரும் ஏரிகள் விரித்த நீர்ப்பாய்ப் பரப்பினில்

புரண்டு எழுந்து சோம்பல் முறித்தான் -

இருபது ஈர இரவுகள் பின்னே இரத்தம் உறைந்து

உடல் விறைப்பதற்குள் மெல்லப் பகல் வந்தது என

மிக மகிழ்ச்சியில் மலர்ந்த மாந்தர் பலரின் பனிக் கன்னங்களைக்

குறும்பாய்க் கதிரவன் கிள்ளிப் பார்த்தான் -

பொருள் பொதிந்த பார்வை ஒன்றினைக்

கண்களின் சிலிர்ப்பில் சிமிட்டி நின்றான் -

" தண்ணீர்தானே வேண்டி மனுக்கள் விடுத்தோம் --

பிரளய ஒத்திகை பார்க்கவா சொன்னோம் ?

அன்பாய் உன்னைச் சற்றே சபித்தால்

பதவியை விட்டா பதுங்கிடச் சொன்னோம் ?"-

என்றே பலவாய் மாந்தர் புலம்பல் பெருமூச்சுப் புயலாய்ப்

பொங்கித் திரண்டெழ அச்சம் கொண்டே மறுநொடி ஆதவன்

மேகக் குகையுள் ஓடி ஒளிந்தனன் !

------சந்திர கலாதர்

No comments:

Post a Comment