Sunday, November 4, 2012

அது ஒரு தனி உலகம் -
மொழிகளில்லா ஒலி உலகம்--
எட்ட நின்று ரசிப்போர்க்கு
சுவை பொழியும் உலகம்
மனம் இளக்கும் உலகம் --
எதை வேண்டி அழுகை ஒலி ?
' ங்கா ..ங்கா ..ங்கா ..ங்கா '
அலை அலையாய்
விடாது தணியாது பரிதாபமாய் --
' ஓவ் ..ஓவ்வ் ..ஓவ் ..ஓவ்வ் '
பதில் ஒலியாய்
இணை ராகத்தில்
இணக்கமான ஓர் சுக லயத்தில் --
அழுகை நிற்பதும் இல்லை
பதில் தேய்வதும் இல்லை--
தூக்கிக்கோ என்று கேட்கிறதோ ?
பசிக்குது என்று தவிக்கிறதோ ?
ஈரம் ஊறுகிறேன் சொல்கிறதோ ?
வியர்க்கிறது என்று கதறுவதோ ?
எறும்போ கொசுவோ
கடிக்கிறது என்று அழுகிறதோ ?
எத்தனையோ கேள்விகள்
மிதப்பனவே என் மனதில் !
என்ன கைவேலையோ
தனித்த அத்தாய்க்கு --
' ஓவ் ஓவ் ' இடை இடையே
' என்னடா செல்லம்
என்னடா கண்ணு
ஏண்டாம்மா வேண்டாம்மா
அம்மா வந்துட்டேண்டீ
யார் அடிச்சது என் ராஜாவை ? '
என்பனபோல் விரவல் நிரவல்கள் !
அதற்கென்ன புரிந்தது ?
இவளென்ன புரிந்து கொண்டாள் ?
குழந்தை அழுகை
நெஞ்சைக் கரைக்கிறது -
அழுகை மெல்லத் தேய்கிறது
தாய் அதனை அணைத்தாளா?
அலுத்துப்போய் அதுவே
அழுத களைப்பில் உறங்கிற்றோ ?
பச்சிளம் பிஞ்சு மொழிக்கென்று
இறைவா ஓர் நிகண்டு தாராயோ ?
-----சந்திர கலாதர்
05.11.2012/ திங்கள் /ஐப்பசி 20
காலை 8 மணி

No comments:

Post a Comment