Saturday, April 14, 2012

பால் காய்ச்சி இருக்கிறீர்களா ?
அது பொங்கி எழும் சற்றுமுன் ஒரு ஆடை தரித்துக் கொள்ளுமே ,சற்று மங்கலாய் -
அதேபோல் ,மேற்கே ஆதவன் அமிழும் முன்பு அதன் வட்ட ஒளி வதனத்தில் அதைவிடச் சற்று சிறிய பழுப்புத் தகடு பாய்ந்து கொள்கிறது; ஆனால் இத்தகடு சூரிய விளிம்புக்குள் விடாது இங்கும் அங்குமாய் முட்டி மோதிக் கொண்டே இருக்கிறது.
அதுபோது சூரியனின் ' பளீர் ' கீற்றுப் பிறை கண்ணில் பாய்கிறது .
இந்த அற்புத ஒளி நர்த்தனத்தை , நண்பர்களே ,யாராவது கண்டு உண்டு களித்திருக்கிறீர்களா ?
வசந்தகால அந்திவேளைகளின் சிறப்பே ஆதவன் ' அமிழ் தோற்றமும் ' இளம் தென்றலின்
உல்லாச ஊர்வலமும் தானே !
அந்தி மாலைகளில் தொடுவானம் பொற்புகை போட்டுக் கொள்ளும் அழகே அழகு !
ஆங்கிலத்தில் நாம் ' golden haze ' என்று குறிப்பிடலாம் .
இம்மாலை உயர்வானம் அலையிலா நீலக்கடலே தான் !
வெள்ளி ஓடங்களாய் எண்ணிறந்த வெண்மேகங்கள் !
வானம் தினமும் , ' என்னைப் பற்றி என்ன எழுதினாய் ? ' என்று கேட்பதுடன் ' இன்று இதோ உனக்காக ! ' என்றல்லவா அமுதக் கிண்ணத்தை அன்போடு அப்படியே என் வாய்க்குள் மெல்லக் கவிழ்க்கிறது .
-----சந்திர கலாதர்
[சனிக்கிழமை ,மாலை 6 மணி / 14.04.2012 / 2, சித்திரை

No comments:

Post a Comment