நான் ஒரு துரியோதனனோ ?
கண்ணில் படுபவை 
நெஞ்சைச் சுடுபவை அனைத்தும் 
காலை முதல் இருட்டிலும் கூட 
ஏன் அக்கிரமங்களாய்
வடிகட்டின அயோக்கியத்தனங்களாய் ?
குப்பைத் தொட்டிவரை தூக்கிவரும் குப்பையை
நெருங்கியதும் வெளியில் விசிறிவிடும் பாதகர்கள் -
தன் வீட்டு வாயிலில் வாகனம் நிறுத்தாது 
அண்டை அயலார் வீட்டை அடைத்து 
அனைத்தையும் நிறுத்தி ,'இது உன் ரோடா? '
எனச் சண்டையிடும் மனம் புதைத்தோர் -
பொது நடைபாதையை வக்கணையாய் வளைத்துக் 
கண்டதைப் பரப்பிக் கடைபோடும் கல்நெஞ்சர் -
' மச்சி பஜ்ஜி ' என்று கொச்சை மொழியில் 
தகாதன கத்தி பெண்மையை இழிவு செய்து  
' கொத்து பரோட்டா ' வேலையைத்  
தம் எதிர்காலத் தொழிலாக்கி 
பேருந்தை ரணகளமாக்கும் கல்லூரி மூடர்கள் --
நடைபாதை, பாலங்கள் பதித்திட்ட பலகைக் கற்களை 
இரவோடு இரவாகத் திருடிப்  
பாதையைப் பொந்தாக்கும் பஞ்சமா பாதகர்கள்--
வரிசையிலே முதியோரும் கைக்குழந்தைப் பெண்டிரும்
கால் கடுக்க நிற்கையிலே 
அரிதாரம் பூசிய  பகட்டு ஆடை வாலிபர்கள் 
வரிசை சிதைத்து வஞ்சகம் செய்து 
காரியம் முடிக்கும் அந்தக் கண்ணில்லாக் கபோதிகள்--
காசு பெறாத காரியத்திற்கு ஏழையை ஏமாற்றி 
அரசு அலுவலக வாசலிலே ஆயிரங்கள் பறிக்கும் 
அற்பப் பதர்களாம் அரசியல் ஆணவத்தார் ---
' ஓசி 'யாய்த்  தினம் தினம் தின்று கொழுக்கும்
அந்த 'ஹோட்டல் ' முன்னே பாதை மறித்து நிற்கும்  
பூதக் கார்களைக் காணாது குருடாகி 
எளிய மனிதர்களின் இரு சக்கர வண்டிகளை 
அடிமாடுபோல் வண்டியில் ஏற்றி நாசமாக்கி 
அலையவிடும் காவல்துறை லஞ்ச அலுவலர்கள்--
பொய் ஒன்றைத் தவிர வேறு ஒன்றையும் பேசாத 
தொலைக்காட்சி விளம்பரங்கள் தரும் தயாரிப்பாளர்கள் --
சொல்லக் கணக்கில் அடங்காது அய்யகோ , என் செய்வேன் !
கருணை உள்ளம் காண்கிலேனே -
' கருணை இல்லம் ' எனப் பெயர் தாங்கும் பல இல்லங்களும் 
கருணையற்ற செயல்கள் பல புரிகையிலே என் செய்வேன் ?
கடவுளே , எனை நீ தருமனாக மாற்ற முடியுமோ சொல் ?
நல்லதையே இன்றை உலகில் எங்கு நான் காண்பேன் ?
----சந்திர கலாதர் 

 
No comments:
Post a Comment