Thursday, May 24, 2012

அம்மா !
வலிகளில் என் உடலைப் பிழிந்து
வலிகளில் உன்னையும் கதற அடித்து
அழுகைகளின் உச்சத்தில் இவ்வுலகில் நுழைகையில்
உன்னைத் தவிர நான் எவரையும் அறியேன் ;
எனக்கு நீ மட்டுமே என்பதாய்
தொப்புள் கொடி தொட்டுச் சொன்னது--
உயிரின் எல்லைக்கே கொண்டு சென்றவனை
நீயோ விழிநீருடன் ஆசையாய்ப் பார்த்தனை ;
சோர்வுற்றபோதிலும் ஓர் நிம்மதிப் பெருமூச்சிடை
ஒரு புறமாய் உன் கையிடுக்குள் படுக்கவைத்துப்
பெருமையாய் வெம்மையாய் அணைத்தனை;
நெடும் கனவுத் தூரிகையின் நனவினை
அயர்வு நதிகளில் மூழ்கிக் கண்டனை ;
எதுவும் அறியாத ,பார்க்கத் தெரியாத எனக்கு
அமுதக் குடத்தின் வாயில் காட்டி உயிர் ஊட்டினை-
பசியையும் கூட நீ தானே முதலில் கற்பித்தனை;
தூங்கக் கூட நீ தானே பழக்கி வைத்தனை -
என் அழுகையின் நிறங்களுக்கெல்லாம்
பொருந்தும் பொருள்கள் கண்டு கையிலும் தோளிலும்
மார்பிலும் நெடும் புடவைத் தூளியிலுமாய்
ஏதேதோ துண்டுதுண்டுச் சொற்கள் கோர்த்து
ஏதேதோ ராக இழைகளில் நளினமாய்ப் பின்னி
உடலை சிறுசிறு நடன அசைவுகளில் திருகி
எத்தனை எத்தனை சமாதானங்கள் சொல்லி
மெதுமெதுவாய் என் இமைகளை உறக்கத்தால் நீவி
பார்வைத் தென்றலை என் மீது இசைத்து
கனவுகளிடை உலவ விட்டு உன் உறக்கம் இழந்தனை ;
உன் அணைப்புப் போலவே அத்தூளியும் இனித்தது ;
இரு கைப்பிடிக்குள் அதை அருமையாய் அசைத்து
இரு எல்லைகள் தொட்டு மீளும் ஊஞ்சல் என்றாக்கி
மெல்லிய இருட்டினை அதனுள் செலுத்தி
தலைக்கு அணை என பூந்துகில் சேர்த்து
கொசுக் கடிக்காது எனைப் பொன்னாய்ப் போர்த்தி
இயற்கை நனைப்பில் 'சர்ர் ' என உருட்டி
வேலைக்கிடையிலும் நெடுங்கயிற்றால் ஆட்டி
சிறு ஓய்வுகளில் முகம் நுழைத்து ஆசையாய்ப் பார்த்து -
அந்தத் தூளிகள் இன்று எங்கே போயின ?
அந்தப் பாச நெருக்கம் இன்றையத் தொட்டில்கள் தருமோ ?
கன்னம் குழிபட சிறு மலர் விரிவாய்
என் தூக்கங்களிடை அன்று சிரித்ததெல்லாம்
உன் அளவிடற்கரிய பாசம் வியந்தே !
உன்னில் வளர்ந்தேன் உன்னால் வளர்ந்தேன்
தூக்கமும் ஆக்கமும் அளிக்கும் தாயை நீங்கி
குழந்தை நெஞ்சில் பிறர்க்கு இடமுண்டோ , மனமே ?
---சந்திர கலாதர்

No comments:

Post a Comment