Monday, May 7, 2012

ஒரு தம்பியின் காணிக்கையாய் 
&
இன்று எங்கள் ' கிச்சா ' அண்ணனின்
முப்பத்து நான்காம் நினைவு நாள் -
' கிருஷ்ணமூர்த்தி ' பெயருக்கு ஏற்றாற்போல்
நிறமும் அழகும் இளமையும் -
எல்லாம் இருந்தென்ன ? ஆயுள் இல்லாது போனதே -
எங்கள் வீட்டின் மற்றோர் தியாகச் செம்மல் ;
துன்ப வாடை எங்களை வருத்தாது
போர்த்தி வளர்த்த அருமை அண்ணன் --
'பிரம்மச்சாரி '--முடிவு முன்பே தெரிந்ததாலோ ?
புத்தகமும் நிகண்டும் விரித்தபடி
எப்போதும் துணையாய் !
குப்புறப் படுத்தபடி தலையணையில் இரு முட்டி குத்தி
ஆழ்ந்து புத்தகம் தாங்கள் உழுகையிலே
இலக்கியங்கள் உள்ளே பயிர் செய்கையிலே
என்னுள் ஒரு சிறு பொறாமை பொரிந்ததுண்டு-
' உங்களைப்போல் ,உங்களை விஞ்சி நான் விரிய வேண்டும் '-
சில பொறாமைகள் தீயவை அல்லவே !
இத்தகு பொறாமைகள் என்னை முடுக்கி விட்டன ;
தங்கள் பொடி எழுத்துக் கிறுக்கல் கடிதங்கள்
தந்தையின் பெருமிதப் புன்னகை பெறுகையில்
என்னுள் முயற்சிப் பிரளயங்கள் வெடித்தன -
பார்த்ததை எல்லாம் ஊன்றிப் படித்தேன் ;
நிகண்டின் பொடிகளை அள்ளிப் பூசிக் கொண்டேன் ;
அப்பாவிடம் புன்னகை மட்டுமே பெறமுடியும் ;
ஆனால் தாங்களோ ,' இவன் கடிதங்களை
என்னால் நிகண்டின் துணையின்றிப் படிக்க முடியவில்லை '
எனத்  தந்தையாரே   விழி உயர்த்திப் பெருமை விரிக்கையில்
என் உள்ள உறுதி பேரலையாய் ஆர்ப்பரித்தது --
எழுதினேன் இலக்கணங்களுள் சிக்கித் தவித்தபடி ;
மெல்ல மெல்ல என்னைச் செதுக்கிக் கொண்டேன் ;
என்னுள் என்னைக் கண்டுகொண்டதுபோல்
எனக்கே தோன்றிய பின் எனை ஆட்டிப் படைத்த
இயற்கையை என் கவிதை நெறியாக்கினேன் -
தந்தையிடம் காண்பிக்க தயங்கி நின்றேன் ;
எனக்குத் தோன்றியதோ தங்கள் உருவமே ;
அஞ்சலில் நெய்வேலிக்கு அனுப்பி வைத்தேன் ;
அமுத மழை தெரியுமா ? எவர் பார்த்தார் ?
நான் கண்டேன் அண்ணனே உங்கள் அன்பு மொழிகளில் !
சிறு பாராட்டுத் தூறலுக்காக ஏங்கிய சிறு பயிராய்
அன்று நான் தவிக்கையில் வேரில் ஊற்றாகினீர் !
இரவெல்லாம் பனி நனைந்து பால்நிலா தின்று
விண்மீன்கள்  பறித்து காதலில் இயற்கை தோய்த்து
அன்று நான் ஆசையாய் எழுதிய கவிதைகள் அவை -
தங்கள் நெடிய கடிதம் கை சேர , விரித்தேன்
காதல் கொண்டு படித்தேன் தவித்தேன்
மறுபடி மறுபடி தேனை விடாது நக்குவதுபோல்
ஒளிந்திருந்து ஓராயிரம் முறை படித்தேன் ,
உண்டேன் உயிர்த்தேன் பறந்தேன் துள்ளி வீழ்ந்தேன் --
ஒரு வாக்கு அதனில் என்னை உச்சி மலைகளில்
உன்மத்தமாய் உலாவ வைத்தன ,இளைஞன்தானே!
'உன் கவிதைகளில் ' வோர்ட்ச்வோர்த் 'தின் சாயல் காண்கிறேன் ! '
வேறென்ன வேண்டும் ஒரு சிறு கவிஞனுக்கு?
' i wandered lonely as a cloud ' என்று எனை மயக்கிய
அந்த இயற்கைக் கவிஞன் அருகில் நிற்பதாய் ஓர் உணர்வு -
இன்று என் கவிதைகளை சில அமெரிக்கர்கள்
ஆங்கிலேயரும் கூட அன்பாய் ஓரிரு வரிகளில் ,
' wonderful ' , ' perfect ' என்று பாராட்டுகையில்
எனது உரமாய் என்னுள் ஊற்றாய் உயிராய் இலங்கும்
தங்களை நன்றியோடு நினைவு  கூர்கிறேன்--
அன்று 07.05.1978 இல் நீங்கள் மறைந்தது அறியாது
09.05.1978 இல் எனது வசந்தனின் முதல் ஆண்டு நிறைவில்
நான் மகிழ்ந்திருந்த கொடுமையை என்னென்பேன் ?
அன்று நான் எல்லோர்க்கும் என் செய்கையால் கசந்திருந்தேன்;
அன்னியப்பட்டதால் அண்ணனைப் பார்க்காத பாவியானேன் ;
அழகிய அண்ணா ,மரணம் சிதைத்த உன் திருமுகம்
இவன்  பார்க்கவேண்டாம் என்று எமனிடம் கூறிச் சென்றனையோ ?
தாங்களும் என்னைக் கொடியோன் என்று எண்ணி விட்டீரோ ?
இவன் ஒரு பாசப் பறவை என்று
என் சிறகுக் காற்று சொல்லவில்லையோ ?
உங்கள் அழகு முகம் என் நெஞ்சில் மிதக்கிறது ;
வற்றாத அன்பு என்னை என்றும் நனைக்கிறது ;
கண்களில் நீர்த்துளி முகிழ்க்கிறது ;
என் காணிக்கையாய் தங்கள் கால்களில் வீழ்கிறது .

-------சந்திர கலாதர்


   
         
          
    

--
S.CHANDRA KALAADHAR

No comments:

Post a Comment