குயிலே , நீ வெகு நாணம் உள்ள பறவையோ ?
இலைச் செறிவுகளில் உச்சாணிக் கொப்புகளில்
விழிகள் நோகவைத்துச் செருகி ஒளிகிறாய் -
ஆனால் பத்துத் திக்குகளும் திணறடிக்கும் 
உன் ஓயாத ஒழியாத கூவல்களும் கொஞ்சல்களும் 
காற்றைக் கதறடிக்கும் கத்தல்களும் 
நாணத்தைப் பந்தாடி நலிந்திடச் செய்வதும் ஏன் ?-
உன் சிறு தொண்டையுள் வலிய புல்லாங்குழல் 
வக்கணையாய்ச் செருகியது யார் சொல்வாய் ?
என் செவியின் ' ராடார்  ' பதிவுகள் மீறி 
எங்கிருந்து கூவுகிறாய் ? திகைப்பில் தவிக்கின்றேன் -
பம்பரமாய்த் தலை பத்து திக்கு சுழன்றிடினும் 
பார்வை சிக்காது பதுங்குகின்றாய் பாவி !
தரை தட்ட மாட்டாயோ , வான சஞ்சாரியே ?
வசந்தம் முழுவதுமே தேடிக் களைத்து விட்டேன்;
கண்டபாடில்லை ;உன் எக்காளமும் நின்றபாடில்லை !
------சந்திர கலாதர்         
 
No comments:
Post a Comment