Tuesday, March 27, 2012

அந்தக் கந்தைக் கோணியில்
சாலையோர மரநிழலில்
பரப்பி வைத்திருக்கிறாளே
பல்போன பாட்டி
தன் கால்களை நீட்டி
சிறுசிறு கூறுகள் கட்டி-
மொத்த மதிப்புமே கூட்டி
ஓர் ஐம்பது ரூபாய் எட்டுமோ ?
காலைமுதல் மாலைவரை
விடாது மெதுவாய்த் துரத்தும்
சூரியனோடு போராடி--
எல்லாம் பள்ளிக்குப் பறக்கும்
சின்னஞ் சிறுசுகளை நம்பித்தான்-
ஓர்நாள் தவத்திலும் கூட
ஓர் பத்து ரூபாய் தேறுமா ?
பின் ஏன் இப்படிப் பரிதாபமாய் ?
அட போடா ,வாழ்க்கையே புரியவில்லை !
ஓர் மணி செல்வதற்குள்
நூறு ரூபாய் பறக்கவிடும்
நமக்கு எப்படி ஏழ்மைப் போர் புரிபடும் ?
வாழ்க்கை வெறுத்ததுபோல்
ஒரு உறைந்த பார்வையினள் பாட்டி -
அருகிலே ஓர் குச்சி காக்கை ஓட்டுதற்கு ;
வீட்டிலே முடியாத தன் தாயை
ஓர் தனயன் தெருவிற்கு விரட்டி இருப்பானோ ?
மருமகள் நாச்சரத்துக்கு அஞ்சி
கிழவி கிளம்பி வீதியோரம் வந்தாளோ ?
ஓர்நாள் விற்பனையில்
என்ன பொருள் வாங்க முடியும் ?
வயிற்றைக் கழுவ முடியும் ?
பேருந்து தடதடத்து நகர்கிறது
சாளரப் பார்வை அறுபட்டுப் போகிறது
பாட்டியை மறந்து என் பயணம் போகிறது
பாட்டியின் வாழ்வுதான் எப்படியோ ?
இறைவா ,பாட்டிக்கு உன் பார்வை தா !
இதுவே பாட்டிக்கு என் தொண்டாய்.
---சந்திர கலாதர்

No comments:

Post a Comment