Saturday, June 16, 2012

மகனே ! என் இளைய மகனே ,சூரியா !
வா , என் அருகில் வந்து அமர் ;
எனக்குள் அழுத்தமான சில லக்ஷியங்கள்!
அவற்றை நீ அலட்சியம் செய்ய மாட்டாய் ;
என் ஜீவ அணுக்களால் அமைந்தவன் நீ -
எப்படி நீ மாற்று சிந்தனை கொள்ளுதல் கூடும் ?
பெண்ணைப் பெற்றோரிடம் இவ்வளவு பொன் போடுங்கள் ;
உங்கள் பெண்ணுக்காக எவ்வளவு கூடுமோ
அவ்வளவு போட்டாலும் சம்மதம் எனக் கூறிப் பின்
' இவ்வளவு தானா? 'எனும் ஏமாற்றம் அதில் ஒளித்து
அதனால் பெண் வாழ்வை முகம் இடித்து
நாராசங்களால் செவி கிழித்து சிதைக்கலாகாது ;
பெண் அன்றிப் பொன் வேண்டேன் என்று உறுதியாய் நில் .
பொன் வேண்டின் என் திறத்தால் நான் பெறுவேன் எனச் சொல் .
அப்படிச் சொனனால் பையனுக்கு என்னவோ ஏதோ என்று
திரைமறைவில் முகவாய் இடிப்போர்க்கு
நீ சிறந்த ஆண்தான் என்று காலம் பதில் சொல்லும்;
பொன் கேட்டு அலைந்தால்தான் நீ ஒரு பெண்டுகன் -
எதுவுமே வேண்டாம் என்று அலங்காரம் அடுக்கிவிட்டு
பின் 'அப்படியே சொன்னாலும் நீங்கள் சீதனம் அடுக்க வேண்டாமா ?'
என்று கதைப்போர் பலர் உண்டு உலகிலே ;
அந்த அக்கப்போர் எதுவும் இன்றி ஒரு சீர் பொருளும்
உறுதியாய் நீயே ஏற்காதே; ஊர்ப்பெண்டிர் மெச்சுதற்கு
நீ பகடைக் காய் ஆகாதே ;தர்மத்தின் பழிச்சொல் ஏற்காதே -
உன் பட்டம் படிப்பு,தொழில் இன்ன பிற கிள்ளையாய்க் கூறி
' படிக்காதவனுக்கே அங்கே அறுபது பவுன் போட்டான் '
என்று சூசகமாய்ப் பேசி உள்ளக் கிடக்கையை தம்பட்டம் போடாதே.
படிக்காதவனுக்குத்தானே , ஆம். பொன் துணை வேண்டும்
படித்தவனுக்கு எதற்கப்பா பொன் கவச மறைப்புக்கள் ?
படிப்பைப் பொன்னால் எடை போடும் மூடமை ஏற்காதே ;
பிள்ளை பெற்று விட்டால் ஈசனுக்கு அடுத்து நானே என
நினைப்பவர் மத்தியிலே நம் குடும்பம் வேறுபட்டதப்பா-
பெண் பெற்றவன் நம் அடிமை எனும் ஆணவத்தின் அடிவயிற்றில்
நெருப்பு அள்ளிப் போடப் பிறந்தவர் நாம் என்று கொள்-
திருமண நாளில் ' பளீர் ' ஒளியிடை பரிசுக்காகவும் பல் இளிக்காதே!
பரிசுகள் கண்டிப்பாக ஏற்கமாட்டேன் என்று அழைப்பில் தெளிவாக்கு;
ஒரு கை குலுக்கி மறு கையுள் கையூட்டு பெறுவதற்கு ஈடு அது;
ஆசிகள் மனதார வாழ்த்துக்கள் மட்டுமே உனை என்றும் வாழ்விக்கும் -
உன் வீட்டின் ஒவ்வொரு பொருளும் உன் வியர்வையில்
உன் ஆண்மையில் நேர்மையில் நடந்து உள் புகவேண்டும் ;
மணமகளும் மணமகனும் எளிமை ஆடையில் எழில் சிறக்க வேண்டும்
பல்லாயிரம் கொட்டி பட்டாடைகள் பூணாதே ,பேசுவோர் பேசட்டும் ;
சம்பிரதாயம் என்று வாய்க்கு வாய் பேசி அச்சேற்றில் நாறாதே
சம்பிரதாயங்கள் என்றுமே தமக்கு சாதகமாக வளைக்கப் படுபவை
பெண் வீட்டாரைக் கொல்வதற்கே உருவான கொலைக் கருவிகள் ;
பெண் படித்திருந்தாலும் அவள் மொட்டை மரம்
ஆண் படித்துவிட்டால் ஆலமரம் எனக் குருடாய் நினைக்காதே ;
பெண்ணுக்கும் வாய்ப்புக் கொடு ;மேற்படிக்கச் செய் -
அந்தப் படிப்புக்கு பெண் வீட்டார் படி அளக்க எண்ணாதே !
பெண்ணை வேலைக்காரி என்று நாளெல்லாம்
உன் பின்னேயே துண்டு தூக்கி அலைய வைக்காதே
சமையலில் துவைத்தலில் அனைத்து வேலையிலும்
அன்போடு கைகொடு தாழ்வாகப் பார்க்காதே -
உன் தாயோ தந்தையோ இதை மீறி ஒருவேளை
ஊர் பேசும் நாய் குலைக்கும் என்று காரணம் கடைந்தெடுத்து
அதைக் கேள் இதைக் கேள் என்று உன் செவியில் வித்திட்டால்
மகனே அவர்களைத் தயங்காது தூக்கி எறி;
ஆண் போல வாழ்வாய் அறுதலியாய் என்றும் வாழாதே
உன் தந்தை அப்படித்தான் திருமணம் செய்து கொண்டான்
உன் தாத்தா பாட்டி பெருமை போற்று -
நீயும் என் வழி நடப்பின் என் ஆன்மா சாந்தி கொள்ளும் .
--------சந்திர கலாதர்

1 comment:

  1. I bow my head to this strong sentiments. Great! Very great!

    ReplyDelete