அவர்கள் எல்லாம் மரங்களை ,
இயற்கைவிரிப்புகளை
வான விசாலங்களை
மலைகளின் பெருமிதத்தை
ஆற்றின் அருவியின் அழகினை
நடந்தபடியே ரசித்தார்கள்
தம் நிழற்படக் கருவிகளுள்
தம்மை முன் நிறுத்தி அடைத்தார்கள்
அவனும் பார்த்தான் நின்றபடி மனம் நிறைந்தபடி--
அவன் எழுதினான் அழகிய கவிதைகளை
அவர்கள் அதைப் பார்த்தார்கள் வியந்தார்கள்
தங்கட்கு இவன்போல் எண்ணங்கள் ஏன் கசியவில்லை ?
'ஆஹா எப்படி இப்படி...? '
அவன் சொன்னான்--
" நீங்கள் பார்த்ததே நானும்
நீங்கள் காட்சியின் விளிம்பு வடிவையே கண்டீர்கள்
நான் மரம் பார்த்ததோடு
கிளை வளைவுகளை
இலைத் தொகுப்புகளை
ஒரிலைமட்டும் இலை நரம்புகள்
பின் பூக்கள் அதன் இதழ்கள் மகரந்த ஊசிகள்
வண்ணச் சிதறல்கள் என்றெல்லாம்
தனித்தனியாய் அணுகினேன் ;
அவற்றோடு காதோடு பேசினேன்
அன்பாய் நீவினேன்
நேசிக்கிறேன் என்று மெலிதாய்ச் சொன்னேன்
முழுதாய் எனை நம்பின
தம் ரகசியம் பகர்ந்தன
சொற்களும் தந்தன
ராகமும் இசையும் தாளமும் கூடக் கொடுத்தன
எனக்கு மட்டும் அல்ல ;
எல்லோர்க்கும் பாகுபாடின்றித் தருவன
அண்டிப் பாருங்கள் ஒன்றிச் சேருங்கள்
மனவளம் ஏற்றாப்போல்
ஒருவற்குக் கவிதையாய் ஒருவர்க்கு ஓவியமாய்
ஒருவர்க்குச் சிற்பமாய் என
அள்ளி வழங்கும் பாரீர் என்றவன்
மறு காட்சியுள் வீழ்ந்தான் .
----சந்திர கலாதர்
05.11.2012 / திங்கள் / ஐப்பசி 20
இரவு 9 மணி
--
S.CHANDRA KALAADHAR
--
S.CHANDRA KALAADHAR
No comments:
Post a Comment