Monday, November 19, 2012

 
ஒரு முதிய மரம் அலுத்துக் கொண்டது --
 
" வயசாகிப் போச்சு
 
வெயில் மழை காத்து எதுவும் தாங்க முடியல
 
மூட்டுக்கு மூட்டு ,கிளைக்குக் கிளை வலிக்குது
 
பறவைகளைச் சுமக்கிறது கூடச் சிரமமா இருக்கு
 
அப்பறம் எங்கே காய் கனி சுமக்கறது ?
 
அடிபடறது போ ?
 
காலேல தல விரிக்கறதுக்கே சோம்பலா இருக்கு
 
பாரு தலைவேற நரைச்சுப் போச்சு
 
கொட்டியும் போச்சு
 
பிள்ளைகுட்டின்னு சுத்தி எத்தனை இருந்து என்ன சொல்ல ?
 
ஏதும் சீந்தறது இல்ல..
 
ஒரு புயல் வந்தாப் பரவால்ல போலருக்கு
 
அப்பாடான்னு பெருசா ஒரு கூச்சல் போட்டு விழுந்துடலாம் போலருக்கு.
 
பாத்ததெல்லாம் போதும் சாமி
 
என்னிக்கு என் கணக்கு முடிப்பானோ ..தெரியலையே
 
என்ன சொல்லி என்ன ?
 
தற்கொலை பண்ணிக்கலாம்னு விழப் போனாலும்
 
இந்த மண்ணுக்குள்ளேந்து ஆச வேர் விடமாட்டேங்குது
 
உஸ் ..உஸ்ஸ் ..உஸ்ஸ் ! "
 
 
பக்கத்து இளைய மரம் -
 
 
" ஏன் பெருசு இத்தனை அலுப்பு ?
 
உன் வயசுக்கு நல்லாத்தான இருக்க ..! " என்றது
 
 
 
பெருசுக்கு இப்போ பாராட்டுல இளமை திரும்பிடுச்சி
 
 
" போடா போக்கத்த பயலே
 
உன் வயசுலே எந்தக் காத்துக்கும் அசரமாட்டேன்
 
உடம்பையே வில்லா வளைப்பேன்
 
தரைய உச்சாணிக் கொப்பால முத்தம் குடுத்து
 
அம்பா மேல வருவேன்
 
புயலு கூட அப்பால மருவாதையா ஒதுங்கிப் போகும்
 
உடம்பெல்லாமே பூவா , காயா ,கனியா
 
தேனடை மாதிரித் தொங்கும்
 
பசங்க கல்லைத் தூக்கறதுக்கு முன்னயே
 
தலய சின்னதா ஒரு சிலுப்பு சிலுப்பி
 
கீழ கொட்டிப் பரப்பிடுவேன்
 
பசங்கல்லாம் மடிதாங்காம அள்ளிக்கிட்டு
 
நல்ல மரம்டா ன்னுட்டுப் போவானுங்க -
 
இதைச் சொல்ற ,
 
பத்தாயிரம் பறவைங்க கூடி ஆடி
 
ஒரே சந்தோஷமா விளையாட்டும் கேலி கூத்துதான்
 
அந்த பாட்டுக் கச்சேரி ஓயவே ஓயாது போ !

அந்த சங்கீதம் வேற
 
இப்பவும்தான் சுத்திக் கார்போற இரச்சல்
 
ஒய்வு ஒழிச்சல் இல்லாம ''
 
நம்ம பேசற சத்தம் நமக்கே கேக்காம காதே போயி ..
 
அப்போல்லாம் ஒண்ணுரண்டு பஸ்சு வரும்
 
'பாம் பாம்'ன்னு ஊதிக்கிட்டு
 
அது கேக்கறதுக்கே சந்தோஷமா
 
நம்ம வீட்டுப் பிள்ளைங்க வர்ற மாதிரி ..
 
இப்போப் பார் மேலயே கறுப்பாப் போச்சு
 
புகை அடிச்சு அடிச்சு
 
நாம பச்சைங்க்றதே மறந்து போச்சே
 
போதாதுக்குத் தூசி புழுதி வேற -
 
அப்பல்லாம் நம்ம மேல மஞ்ச குங்குமம் தீட்டி
 
சாமி கணக்கா கும்பிட்டு வேண்டிகிட்டுப் போவான்
 
இப்ப விழிப்பா இருக்கும்போதே
 
ஒரு கையை வெட்டி வண்டில போட்டுப் போயிடறானுங்க
 
இல்லாட்டி குப்பைய அடிலபோட்டுத்
 
தீயை வச்சிட்டுப் போறானுங்க
 
இல்லாட்டி ரோடு போடறேன்னுட்டு
 
வேரைச் சுத்தித் தாரை ஊத்திட்டு
 
தாகத்துக்கு மழைத் தண்ணி கூடக் குடிக்க விடா
 
சாக அடிச்சு அதைச் சாக்காக்கி
 
வெட்டி வித்துடறான்
 
ஒண்ணொன்னாக் காலி பண்ணி
 
பேசறத்துக்கு பக்கத்துல சாதி சனமே இல்லாமப் பண்ணிட்டான்
 
பாரு சோத்துக்கு செத்து எலும்பா
 
நீங்கள்ளாம் இளவட்டமா ?
 
பாத்து புழைச்சுக்கங்கப்பா !
 
 
இளமரம் நிதர்சனம் கண்டு கேட்டு
 
அசந்துதான் போனது !
 
 
---சந்திர கலாதர்
 
19.11.2012 /திங்கள் / கார்த்திகை 4
 
 
பகல்
 
 S.CHANDRA KALAADHAR

No comments:

Post a Comment