புல்லாங்குழலா நீ ,கண்ணா ?
&
மாதங்களில் நான் மார்கழி என்றாய் கண்ணா
இசைக்கருவிகளில் எது என்று ஏன் சொல்லவில்லை ?
ஓஹோ உன் இதழிலும் கரத்திலும் அது குறித்தனையோ ?
புல்லாங்குழல் ஏன் தேர்ந்து எடுத்தாய் ?
நதியோரம் பசுமைகளில் ஆவினத்தொடு அலைவதாலா?
கரையோரம் நாணற்குழல்கள் நிறைந்து கிடப்பதாலா ?
இசைக்கு அதை அழைப்பதற்கும் எளிது என்பதாலா?
தொலைவுகளில் மேய்கின்ற ஆவினம் மெய்மறப்பதற்கோ ?
எண்ணி மருகும் கோபியரை இசைகட்டி இழுப்பதற்கோ ?
என்ன நாதம் இது நெஞ்சு துளைப்பதுவாய் !
என்ன கம்பீரம் மாவீர நடையாய் !
என்ன உருட்டலிது நதி நீர்ச்சுழியாய் !
என்ன மழலை இது இதயம் கொஞ்சுவதாய் !
வேறு இசைக்கருவி எது இதன்முன் நிற்கும் ?
இரு கைப்பிடியுள் அடங்கி இதழடி அமர்ந்து
உயிர் நாதம் உட்புகுந்து விரல் நடனம் ஆடிடவே
கூர் இசையாய் காற்றின் முதுகேறி
எண்திசையும் ஆனந்தக் களிப்பாக
கண்கள் செருகிட கால்கள் பின்னலிட
தலை ஆட்டம் போட்டிட மனம் மயங்கிடவே
இசைமையம் தேடி இதயங்கள் ஓடிவர
புல்லாங்குழலில் உன் இசையில் கண்ணா
துன்பங்கள் நைந்திடவே உனையே கண்டுகொண்டோம் !
-----சந்திர கலாதர்
08.11.2012 / வியாழன் / ஐப்பசி 23
பிற்பகல் 1 மணி
S.CHANDRA KALAADHAR
No comments:
Post a Comment