Sunday, November 4, 2012

இவர் கடவுள் அல்லர்

ஆனால் மனிதரும் அல்லர்

கண்களில் அத்தனை கனிவு

...
தாயோ எனின் தாயும் அல்லர்

இவரை நேரில் பார்த்தவன் நான்

அருகில் வியந்தபடி

காஞ்சியில் நடந்தவன் நான்

வேறு எவரும் துறவிகளில்

இவர்போல் ஈர்த்தவர் இல்லை

மெல்லிய சொல் மென் பார்வை

நலிந்த மேனி கனிந்த நடை

புத்தகங்கள் சொல்லும்

இவர்தம் முக்கால சக்திகள்

நான் அறியாததால் ஏற்பதில்லை

இவர் பார்வை படருகையில்

ஓர் நொடி உரசிச் சென்றிடினும் --

அது விடுங்கள் -

இவர் நிழற்படம் பார்த்ததுமே

ஒரு காரணமும் புரியாமல்

கண்கள் உருகிக்

கண்ணீர் திரளுதம்மா !

நம் வஞ்சம் கள்ளம் எல்லாம்

பின்கதவு பார்க்கிறதே !

முன் வாயிலில் அடக்கமாய்

பண்பு குனிந்து வருகிறதே !

மெத்தப் படித்த மதாதிபதிகள்

விழிகளில் விளைகின்ற கர்வம்

இவர் கண்ணுள்ளே காண்பதில்லை

இவர் சொற்களிலும் எளிமை

ஒரு தாயின் அன்புச் சாரல்

இவர் ஒரு குழந்தைத் துறவி

ஒரு துறவிக் குழந்தை !

எண்சாண் கிடையாகப்

பாதம் பணிகின்றேன்!



---சந்திர கலாதர்

04.11.2012

ஞாயிறு /பிற்பகல் 3 மணி

ஐப்பசி 19
--
S.CHANDRA KALAADHAR
See more

No comments:

Post a Comment