விண் பார்த்தால்....! .
&
புலராத மொட்டுக் காலை
' ச்ச்சில்' லின் ' கட்டிப் பிடிப்பு
கார்த்திகைப் பிறப்பே இப்படி எனின்
மார்கழிப் பனிக் கடி எப்படி இருக்கும் ?
மொட்டைமாடி -
இதற்கு இதுவே பொருத்தம் ;
வேறு வார்த்தைகள் அல்ல !
கார் நீல வானம் --
உச்சிமேடுகளில் பதித்த வைரங்கள் -
விண்ணைப் பார்த்தால்
என்தந்தையே எங்கும் விண்மீன்களா ய் !
எவ்வளவு அக்கறையுடன்
என் பள்ளிப் பருவத்தில்
குளிர் வானில் கும்மிருட்டில்
நடுங்கும் நக்ஷத்திரங்களை
என் இடுக்கிய விழிப் பார்வையோடு
தன சுட்டுவிரல் கோர்த்துக் காட்டி
என்னை நண்பன் ஆக்கினார் .
" இதோ அந்த வீனஸ் அல்லது சுக்கிரன்
விடிவெள்ளியாய் , குத்து விளக்காய் --
அதோ பார் --
நாய் நக்ஷத்திரம் ' சிரியஸ் '
மிக அருகாமை விண்மீன் -
அது ஓரியன் எனும் வேடன்
இழுத்துச் செல்லும் நாய் ஆகும் !
ஓரியன் இடைக் கச்சையில்
மூன்று நக்ஷத்ர உடைவாள் --
அதோ தெற்கே -
அடையாள விண்மீன் தொகுதி
'சதர்ன் க்ராஸ் ' சிலுவைபோல்
நான்கு நக்ஷத்திரங்கள்-
கண்ணுக்கு எளிதில் புலப்படா
ஆறு கிருத்திகை விண்மீன் தொகுப்பு . --
இதோ வடக்கில் 'க்ரேட் பியர் '
ஏழு விண்மீன் தொகுப்பாய் --
அதன் முன்பக்க இரு மீன்களை
மனதுள் சேர்த்து கீழ் இழுத்துப் போ -
தொலைவான் தொடுவில்
மங்கலாய் ஒரு நக்ஷத்திரம் ,தெரிகிறதா ?
ஊன்றிப் பார் -" என்று என் உயரம்
சளைக்காது குனிந்து நிமிர்ந்து
அந்த ' போல் ஸ்டார் ' எனும்
துருவ நக்ஷத்ரம் பறித்துக் கொடுத்தீர்களே !
" அப்பா இது இடம் பெயராது
இது வைத்தே மாலுமிகள் தொன்று தொட்டு
வட திசை கண்டு பிற திசை பொருத்தி
கடற் பயணம் செய்தனர் ;
அதோடு இந்த அச்சைச் சுற்றியே
நமது பூமி சுழல்கிறது
அதனால் எல்லா நக்ஷத்ரங்களும் கூட
இது அச்சாக்கிச் சுழல்வதுபோல் தோன்றும்
அதோ உச்சிவானுக்கு ஓர் கச்சை போல்
வழியில் சிந்திப் போன பால் போல்
கோடிக் கோடியாய் மாவுச் சிதறலாய்
அதுதான் 'மில்கி வே ' எனும் ' பால் வீதி '--
தென்மேற்காய் வண்ணங்களை
உமிழ்ந்து பளீரிடுகிறதே
அதுதானப்பா 'வேகா ' விண்மீன்
தேள்கொடுக்காய் விருச்சிகன்
எனும் 'ஸ்கார்பியோ ' தொகுதி
'லிப்ரா ' என்னும் ' துலாம் ' " என்றபடி
மார்கழி மாதம் வெவ்வேறு நேரங்களில்
அந்த உத்தமபாளையத்து
இருள் கிராமத்து வீதியில்
ஒளிர் வானத்து அதிசயங்கள் அனைத்தும்
பன்னிரெண்டு ராசிக் குழுமங்களும்
குழந்தை ஆவலுடன் எனை எழுப்பிக்
கற்றுத் தந்த பாடம்தான் மறக்குமா ?
உங்கள் அன்புதான் தோற்குமா ?
பின்னாளில் நான் படிக்கும் இடங்களில்
பணி புரிந்த ஊர்களில் எல்லாம்
விண்ணின் வரைபடமும் டார்ச்சும்
அருகில் கொண்டு பனித் தூவலில்
கோரைப்பாய் மீதில் மல்லாத்தி
விண்ணை விழிக்குள் வரைந்து
பெயர்தேடித் திரிந்ததெல்லாம்
நனைந்துபோன தலையணை மறக்குமா ?
மார்கழிகள் தான் மறந்திடக் கூடுமோ ?
" அதனால் தானப்பா கண்ணன்
மாதங்களில் நான் மார்கழி என்றான் "
என்று கற்பித்த தந்தை மறப்பேனோ ?
---சந்திர கலாதர்
18.11.2012 / ஞாயிறு /
பகல் மணி 10.30
--
S.CHANDRA KALAADHAR
S.CHANDRA KALAADHAR
No comments:
Post a Comment