Sunday, November 4, 2012

'ல'கர '...ஹா'கார இன எழுத்தொலிகளே மிகுந்து 'அக்குபர்' என்ற தனி வார்த்தை நின்று நிதானமாய் 'இ'கர '..அ'கர ஒலிகள் விரவி
அந்தி வேளைகளில் பள்ளிவாசல் கூர் கோபுரங்களில் பிறந்து உச்ச ஸ்தாயியில் தேன் நகர்வாய் காற்றில் பரவிவரும் அந்தத் தொழுகை அழைப்பு
ஏதோ விவரிக்க முடியாத தவிப்பை என்னுள் தினமும் ஏற்படுத்துகிறது .
நடந்துகொண்டே படிக்கும் என் உலா உறைந்து போகிறது ;
புத்தகம் தானே மூடிக் கொள்கிறது .
எதிர்பாராத் திருப்பங்களும் வளைவுகளும் உயர்ந்தெழுதல்களும் தாழ் சறுக்கல்களுமான ராகப் பயணம் ....ஒரு நொடி அழுகைபோல் ....ஒரு நொடி பரவச விம்மல்போல்...
வான் துளைத்து இறையடி வீழ்தல்போல்....
இப்போது முடியுமா அடுத்த அடி வருமா என்ற திகைப்பு எப்போதுமாய்
ஆனால் பட்டென்று முடிந்துபோய் ஒரு வெற்றிடம் வானைச் சூழ்வதாய் உணர்கிறேன் .
இது வான் எழுகையில் நான் நானாக இல்லை .
வான் மிதப்பது போல் உணர்கிறேன் .
இதேபோன்றுதான் தோப்பு துரவுகள் நிறைந்த சிற்றூர்களில் மரங்களை ஊடுருவி அலைந்து வரும் ஆலயமணி நாதங்களும்
என்னுள் அசாதாரண அதிர்வுகளை ஏற்படுத்தி விடுகின்றன.
தெய்வ சந்நிதானத்தில் நான் மட்டும் மங்கிய தீப ஒளியில் மயங்கி நிற்பதுபோல் உணர்கிறேன் .
என் தலைக்குள் கட்டப்பட்டிருக்கும் அப்பெரு மணியை என் கரங்களால் இழுத்து அடித்து ஒலிப்பதாய் ஒரு பிரமை
அல்லது ஒரு பிரேமை .
மனம் கூட இந்த நேரங்களுக்காக ஏங்குகிறது.
---சந்திர கலாதர்

--
S.CHANDRA KALAADHAR

No comments:

Post a Comment