எத்தனை முறை சொல்லிக் கொடுப்பது ?
அன்பாய் அடுத்து சற்று உரத்து
பின் கடுமையாய் பின் சின்னதாய்ப்
பின் மண்டையில் செல்லத் தட்டுத் தட்டி --
எத்தனை முறைம்மா சொல்வது ?
நெருஞ்சி முள் ஒளி அம்புகளாய்
'சுடீர் சுடீர் 'சிறு வெடிப்புகளாய்ப்
பூத்துச் சிதறி அச்சுறுத்தும்
கம்பி மத்தாப்புகளை முழுக் கை நீட்டி
உயர்த்தித் தொலைவாகப் பிடிக்கணும் என்று
எத்தனை முறை சொல்வது கண்ணா ?
' சுர்ர் ' என்று நுனி ஏறிப் புகை கக்கி
ஒளி கக்கிப் பின்னேகி மங்குதற்குள்
உன் கரம் தாழ்ந்து இரண்டாகக் குறுகுவதேன் ?
அச்சத்தில் உடல் நெளிவதும்
கண் இடுங்குவதும் கை உதறுவதும்
பாதியிலே ' தொப் ' பிடுவதும்
ஏற்றுகிறேன் பேர்வழி என்று
தீபம் அணைப்பதுவும்
பொறுமை இழப்பதுவும்
அடிக்கடி பதறி உள் ஓடி
கை இருப்பு பார்ப்பதுவும்
உன் பின்னாலே விடாது உளறியபடி
நான் வீணே அலைவதுவும் --
அப்பாடா காயங்கள் இன்றி
ஓய்ந்ததடா பண்டிகை நாள் என்று
கிறங்கி நான் நாற்காலி சாய்வதுவும்--
இதுதான் ஒவ்வொரு வீட்டிலும்
தவறாத தீபாவளிக் காட்சியடா !
&
----சந்திர கலாதர்
12.11.2012 / திங்கள் / ஐப்பசி 27
காலை மணி 11.
S.CHANDRA KALAADHAR
No comments:
Post a Comment