Thursday, March 29, 2012

எந்தத் தீக்குச்சி உரசினாலும் இன்று பற்றிக்கொள்ள மறுக்கிறது ; அப்படிப் பாலையாய் ,பசுஞ்சோலை ஒன்றுமே இல்லாத பாலையாய் ,மிக வெறுப்பாய் ,மிகத் தகிப்பில் மனம் வதங்கி வாடுகிறது ;அங்கே தனிமையாய்த் தவிக்கிறேன் ;கணினியை அணைக்கிறேன் ..வானம் பார்க்க மாடி செல்கிறேன் காற்றில் வலைபோட ..!
மாலைக்காற்று உற்சாகமாய் எனை மூழ்கடித்துச் செல்கிறது.
மரங்கள் கிளைகளை அசைத்து ,கிளைகள் இலைகளை அன்பாய்த் தாலாட்ட---
அதோ ,கிழக்கே....வட தெற்காய் ஒரு நூறு நீர்ப்பறவைகள் வானில் அழகாய் அணிவகுத்து ,நொடிக்கொருமுறை அணி வடிவங்களை மாற்றி மாற்றி ,நெடிய பாம்பொன்றின்
தொடர் வளைவுகளாய்...ஒரு நீண்ட கயிறை கையில் பிடித்துச் சுண்டுகையில் எழும் அலைவுகள்போல்....அற்புதமாய் ,அதையே புள்ளிகளாய் மறைவதுவரை வைத்த விழி எடுக்காது பார்த்து வியக்கிறேன் .
ஒரு நீர்த்தொட்டி நிரம்பி இணைப்புக் குழாய் வழி பீறிட ,காகங்கள் ஒன்றொன்றாய் குழாய் முனை அமர்ந்து ஒரு ஆட்டு ஆட்டி ,தலையை நீர்த் தாரையுள் விட்டு அலகால் ஒரு வாய் நீர் பற்றி ,தலையை வான் உயர்த்தி ரசித்துக் குடித்து,பறக்கையில் பலமாய் மறுபடி நீர்த் தாரையை நடனமாடவிட்டு ...ரசிக்கிறேன் .
செந்தழலாய் , பின் செம்பூவாய் இறங்கும் குறையில்லா சென்னிலவுச் சூரியன் ,அடிவானில் மறைகையில் ஒரு அழுக்காய் , அசடாய் ஏன் இன்று மறைகிறது ?
வசந்தம் வந்து கொண்டிருக்கிறது தெரிகிறது ...மாமரம் கண்ணாடிப் பழுப்புக் கொழுந்து இலைகளை கிளைமுடிகளில் சூடிக்கொண்டுள்ளன ...வேம்பு அடர்ந்து கொழுத்து உள்ளன ..
முருங்கை வெண் பூக்களை ,தொங்கும் பாம்புகளாய் முருங்கைக் காய்களை தம்மில் குவித்துக் கொண்டுள்ளன .
காரைச் சுவற்று இடுக்கில் உயிர் கண்டு கொண்டு ஒரு அரசஞ் செடி அழகிய இதய இலைகளைப்
பிறப்பித்து உள்ளது .
மண்ணுள் புத்துயிரின் நடமாட்டம் புரிகிறது ..கீழைக் காற்றில் ஒரு புது சக்தி பொங்குகிறது .
எனக்குள்ளும் பாலை வடிந்து வசந்தம் ஓடி வருகிறது.
மாலையே ,உனக்கு நன்றி .
--சந்திர கலாதர்
29. 03 2012 / வியாழன் /மாலை ஆறு மணி /பங்குனி -15.

No comments:

Post a Comment