Monday, July 23, 2012

கங்கைக் கரையோரம்
#
அப்பழுக்கு இன்றி ஹிமாலயத்தில் துளிர்த்து
மலைகள் உருண்டு பள்ளங்கள் வீழ்ந்து
புண்ணிய நதியாய் உயிர் நதியாய்
உயிர் ஊட்டும் நதியாய் நம்பிக்கை நதியாய்
தெய்வதமாய் , தாயாய்த் தரை இறங்கி
தன்னலமே இன்றித் தன்னை அழுக்காக்கி
இறந்தோரை மடி தாங்கி
புண்ணிய லோகங்கள் புகுவிப்பாய் எனும் அவர்
அசையாத நம்பிக்கை மௌனமாய்ச் செவி ஏற்றி
அன்பாய்ப் பெருகி ஓடும்
எங்கள் இந்திய இதயமே ! கங்கைத் தாயே !
நன்றியுடன் பணிகின்றேன் உன் கரை ஓரம் !
பூவால் அர்ச்சிக்கிறேன்
என் சொல்லால் அர்ச்சிக்கிறேன்
உன் பாதம் என் கண்ணீரால் கழுவுகிறேன் !
உன்னிலே கோடி மாந்தர் அனுதினமும்
மனதில் கோடிக் கவலையுடன் நீராடி
தாய் மடிமேல் தன் குறை சொல்வதுபோல்
மனம் விட்டு விழிமூடி ஏதோ சொல்கின்றார் ;
அவர்களைப் பார்க்கின்றேன் வைத்த விழி பெயர்க்காது -
அந்த முகங்களில்தான் எத்தனை நிலவொளி !
முழு நம்பிக்கையில் ஊறிய நிம்மதியின் அழகு நடை !
தெய்வமுடன் எதிர் எதிரே ஒற்றையாய்ப் பேசும் மன நிறைவு !
கை இரண்டும் கூம்பி விழி மூடிப் பிரார்த்திக்கையில் ...
இந்த நம்பிக்கையை இந்தப் பரவசத்தை
இந்த உன்னதத்தை இந்த சத்தியத்தை
இன்னும் எத்தனை கோடிப் படை எடுப்புகள்
இந்த மண்ணிலே வந்தாலும் வெற்றிகொள்ள முடியாது -
ஏனெனில் இது மிகத் தெய்வீகமானது தாயே !
நீயே சத்தியம் ! நீயே கடைத்தேற்றுவாய் ;
யுகம் யுகமாய் நெஞ்சிலே செதுக்கம் கொண்ட சத்தியம் நீ !
விழிமூடி நெஞ்சுள் உனை நிறைக்கும் போதினிலே
பாதி உடல் முழு உயிர் உன்னில் மூழ்கி இருக்கையிலே


அந்த முகத்தைப் பாருங்களேன் அந்த தெய்வ சந்திப்பை !
மனம் நெகிழ்ந்து போகிறேன்
இந்தியர் அனைவரும் நம்பிக்கையில் உன்னுள் ஒன்றாயினர்
வார்த்தை இல்லை அந்த ஒரு முக தேஜசை
சொற்கோலம் போட்டுக் காட்டுதற்கே !
பெண்கள் நீராடுகையில் தெய்வமே ஆயினரோ !
பெண்ணை,பெண்மையை ,தாய்மையை
மண்டியிட்டுப் பணிகின்றேன் கங்கைக் கரையினிலே !
-------சந்திர கலாதர்
[ 23.07. 2012 / திங்கள் /ஆடி 8 /இரவு 9 மணி ]

No comments:

Post a Comment