வானம் தொட்டு விடும் தூரத்தில் இருக்கிறதோ ?-
கார்காலம் அப்படி நினைக்க வைக்கிறது.
காக்கைக் கூட்டங்கள் குழுக்குழுக்களாய்த் திரிவதுபோல்
அதன் கழுத்து நிற மேகத் தொகுதிகள் வானம் நிறைத்து இருக்கின்றன -
பூமிக் குழந்தையை வானம் கருமேகப் பூச்சாண்டி இறக்கி பயமுடுத்துகிறதோ ?
மேக விளிம்புகளில் மழைச் சொரிவுகளின் நெடிய அசையும் திரைகள் அற்புதமாய் !
வானில் காற்றைக் கெஞ்சிக் கொண்டிருக்கும் பட்டங்கள் .
தென் வடலாய் மேலைத் திசையில் மேக சஞ்சாரங்கள்-
மழை இறக்க மனமில்லாத மேகப் பொதிகள் இடுக்குகளில் இழிய விட்டுவிட்டு யாருக்கோ எங்கோ
நீர்க்கலயம் ஏந்திச் செல்கின்றன.
குயில் ஒன்று மேகங்களைப் பரிதாபமாய் , ' டு...வீ , டு...வீ ' என்று ஏங்கி அழைக்கிறது .
அவற்றின் காதில் விழுந்ததோ இல்லையோ ,தெரியவில்லை .
----சந்திர கலாதர்
[ 20.06.2012/ மாலை 5 மணி ]
No comments:
Post a Comment