கொன்றை மர வகைகள் தமக்குத் தாமே பூ அபிஷேகம் செய்து கொண்டிருக்கின்றன ;
அல்லது ஆகாயத்தின் பாதம் பணிந்து நின்று ,உச்சந்தலைகளில் மலர் தூவிய ஆசிகள் பெற்றனவா !
இலைகளைத் திருப்பித் திருப்பிப் பூங்காற்று அப்படியென்ன அதிசயம் காண்கிறது ?
காற்று பூக்களைத் தாலாட்டுகிறது ;
காற்றை நான் பார்க்கிறேன் ;
காற்றை நான் கேட்கிறேன் ;
காற்றின் மொழியினை நான் படிக்கிறேன் ;
காற்றை நான் தொட்டுத் தொட்டுப் பார்க்கிறேன் !
இந்த உலகின் உல்லாசம் எனக்கு வேறெங்கு கிடைக்கும் இப்பிரபஞ்சத்தில் ?
நான் ஜூன் மாதத்தில் வசந்தத்தின் வண்ண மலர்ச் சொரிவுகளை , கொத்து மலர்க் கோலங்களை
இன்னும் ஓராண்டிற்கு இழந்து கொண்டிருக்கிறேனா ?
நான் புதியதாய்க் கார் மேகங்களுக்காகக் காத்திருக்கிறேனா ?
நீர்ப் பாதைகள் மேலேறி மின்னல்களைப் பிடிக்க மயங்குகிறேனா ?
மின்னல் கயிறுகள் கொண்டு மேகக் கூரை அமைக்க எண்ணுகிறேனா ?
வானம் , வியர்க்க விறுவிறுக்கும் சூரியனுக்கு ஒரு வழியாய் விடை கொடுத்திருக்கிறதோ ?
சூரிய தாகம் ஒருவாறாகத் தணிந்து விட்டதோ ?
நண்பகலிலும் ஓர் மங்கிய மயங்கும் ஒளி காற்றோடு குதூகலமாய் உறவாடுகிறது !
கடைசியில் ஒளிந்துவிட்ட சூரியனை ....சூரியனா அது ?...சூரியனின் சந்திரனை அல்லது சந்திரனின் சூரியனை ..மேகத் திரை வழி பார்க்கிறேன் , துன்புறுத்தாத ,அரைத்தூக்க விழிகளுடன் !
காற்றுத்தான் மற்ற நான்கு சக்தி வடிவங்களுக்குமே உயிரூட்டம் கொடுக்கிறது.
காற்றில்லாமல் ஒளி , ஒலி,மண் ,விண் எதற்குமே அழகில்லை ;சக்தியும் இல்லை .
காற்றுத்தான் இப்புவியின் விழாக்களின் நாயகன் ;
சந்தோஷங்களின் உயிர் ஊற்று ;
சிரிப்புகளின் சிறப்பு !
மரங்கள் ,மலர்கள் ,இலைகள் ,அலைகள் ,ஜ்வாலைகள் ,விண்மீன்கள் எல்லாமே மகிழ்ச்சிக் கூத்தாடுவது காற்றின் கைகுலுக்களில்தான்..தோழமையில்தான்!
காற்றே ...என்னை நீ அயர்விலிருந்து , தளர்விலிருந்து, மரணத்திலிருந்தும் காப்பாற்றுகிறாய் !
என்னைக் கொஞ்சுகிறாய்..தழுவுகிறாய் ,கட்டி அணைக்கிறாய் ..தள்ளியும் விளையாடுகிறாய் !
புற்தரைகளில் மாயம் காட்டுகிறாய் ;
அலைகளைப் பூரிக்க வைக்கிறாய் ;
செவிகளில் பறவைகளின் இனிய அழைப்புகளைச் சேர்க்கிறாய்-
ஆஹா ! ஒரு மழை துவங்குகிறது மாயச் சூழலிடை--
இதை எப்படி மழை என்பது ?
அங்கொன்றும் இங்கொன்றுமாய் ...பல நொடி இடைவெளிகள் விட்டு விட்டு ..மேக மெல்லிய கசிவாய்..என்னை நனைக்காது ..ஈரமும் ஆக்காது ..மெல்லிய தொடர் தூறலும் ஆகாது ..அப்படி என்ன மழை இது /
இது மழையே அல்ல ..பின் எது சொல்லத் தெரியவில்லையே !
இவை மாயத் துளிகள் ..என்னை மயக்கும் மலர்களோ ?
என் மேனியை அத்துளிகள் தீண்டுகையில் என்னில் எத்துணை சிலிர்ப்பு !
உதடுகள் உள்ளச் சொற்களைப் பிதற்றுகின்றன;
ஆனந்தம் என்னை உருட்டுகிறது;
இது மேனி அனுபவங்கள் ..சொல்லில் சிறக்காது .
---சந்திர கலாதர்
[ 18.06..2012 / திங்கள் கிழமை / ஆனி 4 / நந்தன ஆண்டு /மாலை மணி 4 ]
No comments:
Post a Comment