அம்மா !
நம் திறமை ஏதோ ஓர் துறையில் பாராட்டுப் பெறுகையில் ,மனம் துள்ளிக் குதிக்கிறது ;
இது இயல்புதானே அம்மா !
அந்தப் பாராட்டை அப்படியே மனம் கனக்கச் சுமந்துகொண்டு , நம் உளம் நெருங்கிய ஒருவர் முன்னே ,மிகுந்த ஆசையுடன் கவிழ்த்து ,அவரது விழி விரிதல்களை ,முக விசாலங்களை ,நெஞ்சு ஊறிவரும் பெருமைச் சொற்களைக் கேட்டு வானில் பறக்க இதயம் ' பறபற' க்கும்.
என் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் ,அதுவும் என்னாலேயே மாற்றம் செய்யப்பட்டவை , சிலவற்றை அயல்நாட்டு கவிஞர்கள் சிலர் மனமாரப் பாராட்டி ,அது பலர் பார்க்க வெளிவருகையில் ,எனக்கு அதைத் தூக்கிக் கொண்டு ,அம்மா ,உன் திசையை நோக்கித்தான் ஓடிவரத் தோன்றுகிறது .
எவர் மொழிகளிலும் நான் எதிர்பார்க்கும் உணர்வுகள் ,அதன் விளைச்சல்கள் இல்லாது போகின்றன ;
என் மனம் தவிப்பில் சோர்கிறது ;
அம்மா ,மற்ற எவரிடமும் ,அது என் உடன்பிறப்புகள் ஆயினும்கூட ,என்னால் என் உணர்வுகளை
உள்ளது உள்ளபடியே கொட்டித் தீர்க்க முடியாமல் குன்றி நிற்கிறேன் ;
என் சிறகுகள் வெட்டப் பட்டது போன்ற வலியில் துடித்துப் போகிறேன் ;
ஆமாம் ,என்னால் எவர் முன்பும் இயற்கையாய் நான் எண்ணும் உயரத்துக்குப் பறக்க முடியவில்லை , தாயே !
அவர்கள் முன்பு நான் செயற்கையாகிறேன் ;
' தற்பெருமைக்குள் தலைகுப்பற வீழ்கிறானே! என்ன பிதற்றல்? ' -என்று நினைத்து விடுவார்களோ என்று என்னை விலங்கிட்டுக் கொண்டு விடுகிறேன் தாயே !
ஒவ்வொரு வரியாக ,ஒவ்வொரு சொல்லாக என் கவிதைகளின் ஆழ அகலங்களை நான் விளக்க எண்ணுகையில் ,பிரதிபலிப்புகள் மங்கிய நிலையில் நான் தோற்று நிற்கிறேன் ,அம்மா !
அம்மா ,உன்னிடம் தான் என் இதயம் எல்லாத் திரைகளையும் விலக்க முடிகிறது ;
என் முகமே பல வாய்களாக பரிணமிக்கின்றது ; அணுஅணுவாக ஒவ்வொரு உணர்ச்சியையும்
மலர்த்துகிறது ;
அம்மா, நீ பேசுவதில்லை ;மௌனமாகிறாய் ;
உன் கண்கள் என்னை விழுங்குகின்றன ;என் சொற்களைத் தாகத்துடன் அருந்துகின்றன.
குறுக்கீடுகள் எதுவும் இல்லை ; ஆர்வக் குறைவுகள் எங்கும் இல்லை ;
என் வாய்க்கலயம் அனைத்தையும் கொட்டித் தீர்த்த பின் ,பெருமிதமாய் ஒரே ஒரு புன்னகை உன் இதழ்களில் தவழ விடுவாயே , அது ," நீ ஜெயச்சுட்டடா கண்ணா ! " என்று சொல்லாமல் சொல்லும் ;
அதற்காக நான் என்றும் ஏங்குகிறேன் .
உன்னைத்தேடி மொட்டை மாடியில் திறந்த வெளியில் வான் நோக்கிக் கூவி நிற்கிறேன் ;
அம்மா ,விண்ணுலகில் நீ எங்கிருந்தாலும் அங்கே என் உணர்ச்சி ஊற்றுகள் பாய்ந்து உன் பாதங்கள் நனைக்கும் ;
எங்கிருந்தாலும் நீ மனம் எல்லாம் மொழியாக வாய் மட்டும் மௌனமாய் வாழ்த்துவாய் ;நெஞ்சம் பெருமையால் விம்முவாய் ;
அது போதும் அம்மா எனக்கு !
---சந்திர கலாதர்
No comments:
Post a Comment