கடவுளே !
எனை இந்தப் புவிக்குள் அனுப்பி வைத்தாயே -
எனை வாழ்விக்கவா ?
அன்றித் தண்டிக்கவா ?
முன்னது என் கையில் எனினும்
பின்னது உன் கையில் அல்லவா?
அது முடிந்ததா ? இன்னும் தொடருமா ?
தட்டு நிறையக் கசப்பைக் கொட்டும் நீ
தித்திப்பை மட்டும் சொட்டுகிறாய் ;
அடிக்கடி என் மண்டையிலும் குட்டுகிறாய்-
சந்தோஷம் ஒன்று வந்துவிட்டால்
சவுக்கடி நான்கும் தொடர்கிறதே !
கண்ணீர்க் குளத்தின் நடுவிலேதான்
சிறு மகிழ்வு பூத்திடல் விதியாமோ ?
எனக்குள் புகுந்து இயக்குவோனே !
ஜதிகள் சுத்தமாய் ஆடினேனா ?
அடவுகள் சரியாய்ப் பிடித்தேனா ?
என் பாதையில் தடங்கள் பதித்தேனா ?
சிலரது நினைவில் நிற்பேனா ?
மறந்த கனவாய்ப் போவேனா ?
தினமும் என் விரலினை உயிர்க்கின்றாய்
' சாவிப் பலகையில் ' துள்ள வைக்கின்றாய் ;[ keyboard]
என்னை அதன் வழி கொட்டுகிறேன்
சிலரது நெஞ்சை அடைகின்றேன் ;
இதனில் நிறைவு காண்கின்றேன் .
--------சந்திர கலாதர்
No comments:
Post a Comment