' காசு பெறாதவை பற்றியே எழுதுகிறாயே -
உயர்ந்த தத்துவங்கள் கைப்படவில்லையா ? '--
எல்லோரது சலிப்பும் விழி சுருக்கலும்
மேற்போக்கான படித்தலும் ஒதுக்கலும் அறிகிறேன் ;
மரங்கள் ,மலைகள் ,வானம் ,கடல் இவைகள்
உயர்ந்தவைதானே ; உன்னதங்கள் தானே !
அற்ப நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கினால்
முகிழ்ப்பது மெல்லிய மகிழ்வுகள் அல்லவா !
ஓர் தென்னை தன் கனவில் மெலிதாய் அசைவதும்
கீற்று வளைவில் சிறு பறவை மௌனம் ரசிப்பதும்
காகக் கூட்டம் மாலைப்பொழுதில் கூடிக் கரைவதும்
காற்றின் குறும்புக் கிள்ளலில் கிளைகள் வெட்கி நெளிதலும்
பெண்கள் ஒருவருக்கொருவர் கூந்தல் கூட்டலும்
குழந்தைகள் மணலில் புரட்டும் மொழிகளும்
அற்பமாய்ப் பார்க்கும் எருமையின் சிந்தையும்
ஒற்றைச் சிந்தையாய் ஓடித் திரியும் எறும்பு வரிசையும்
இன்னும் எண்ணிலா அற்பங்கள் அனைத்துமே
என்னுள் ஈடிலா ஆனந்தம் விதைப்பன;
சிந்தைக்குள் கோடிக் கற்பனை தெறிப்பன;
என்னைப்போலே எங்கோ ஒருவன் ரசித்து மகிழ்வான் ;
அவனுக்கும் எனக்குமாய் எழுதி நிறைகிறேன் !
---சந்திர கலாதர்
No comments:
Post a Comment