தொல்லைக் குயிலே !
குயிலே!
ஏ வெட்கப்பட்ட ஜென்மமே !
ஏன் வெட்கம் கெட்டுக் கத்துகிறாய் ?
லக்ஷார்ச்சனை யாருக்கு?
என் செவிப்புலன் தோற்கிறதே?
பத்து மரங்களிலும் ஒரே குரலாய்
கோயில் திருவிழாப் பத்துக் குழல் ஒலிபெருக்கிகளாய்
உனைத் தேடுகையில் என் கழுத்து நோகுதையோ !
இலை அசைவுகொண்டு உன் இசை அசைவு தேர்வதிலும்கூட
நான் தோற்கிறேனே !
மாறுபடும் இடைவெளிகளில்
வேறுபடும் அழுத்தங்களில்
கோபம் கொப்பளிக்க காதல் அலைமோத
சோகம் கப்பி வர மோகம் மோதி எழ
குரல் மாற்றி இசை மாற்றி
காலை முதல் எத்தனை முறை நீ
இக்காற்றைக் கலக்கியிருப்பாய் !
வாய்தான் வலிக்காதோ?
நெஞ்சும் புண்ணாகிப் போகாதோ ?
சுமக்கும் காற்றுக்கே வலிக்கிறதே!
என் செவியும் தான் நோகிறதே !
வசந்தம் முழுதும் கதறும் நீ
பிற பருவங்களில் எங்கு ஒளிந்தாய் ?
இக் குரலையும் எங்கு ஒழித்தாய்?
ஏ...அடங்காப் பிடாரி !
திருட்டுப் பறவாய் !
தரை தட்டாக் கவியே !
இலை மறைவு இருளே !
குரல் குறைக்கா ஓலமே !
இடைவிடாது உச்ச ஸ்தாயியில்
கூக்குரல் போடாதே !
நெஞ்சை அறுக்கிறது உந்தன் வேதனை !
எங்காவது ஓடிப் போய்விடு !
எனக்கே பைத்தியம் பிடித்துவிடும் போலானேன் !
அன்றிடில் நான் ஓடிப் போகிறேன் !
நீ கத்தியே சாகாதே !
இது வசந்தம்தான் ..தேர்தல் நேரமல்ல !
..............சந்திர கலாதர்
[சில நேரங்களில் நம் கவலையிடை குயிலின் கூவலும் மிகத் தொல்லை தந்திடும் .குயில் பற்றி நன்கு அறிந்தவர்களால் மட்டுமே இதனை அனுபவிக்க முடியும் ]
No comments:
Post a Comment