Wednesday, June 22, 2011

MISERY THAT MAKES WONDERS !

விந்தை புரியும் வேதனையே !

கடவுள் நினைப்பில் நெஞ்சம் நிறைந்து
இறைவன் திருவுரு இமைகளில் நிறுத்தும்
ஆத்திகன் ஒருவனைத் துன்பம் நீ அடையின்--

வேதனையில் அவன் மிக வாடுறும் போதெலாம்
" கடவுளே இல்லை !பொய்மை அனைத்தும் ! "
எனப்பல உரைத்தே இறைதனை நோவான் !

" கடவுளே இல்லை ; ஈனன் நம்புவோன்;
உடையடா சிலைகளை ! "--எனப் புறம் பேசியே
உள்ளத்து நினைப்பைத் திரையிட்டு மறைத்து
வாதங்கள் செய்து ஊரினை ஏய்க்கும்
நாத்திகன் ஒருவனைத் துன்பம் நீ அடையின் --

வேதனையில் அவன் மிக வாடுறும் வேளையில்
" கடவுளே ! கடவுளே !காப்பாற்று எனையே ! "
எனப் பல புலம்பி அழுது அரற்றுவான் !

முன்பேசிய வாதம் மறைவிடம் பொசுக்கி
இல்லாத இறையை இப்போது அழைப்பான் !
சுற்றியே பார்த்து ஒருவரும் இல்லையேல்
நெற்றி முழுவதும் நீற்றினைப் பூசுவான் !

யாருமே அறியாது பூசனைகள் புரிவான் !
கதவினைத் தாளிட்டு விழுந்தும் எழுவான் !
" சிவசிவ " எனவும் போற்றியே கரைவான் !
ஆயிரம் தெய்வங்கள் கூவியே அழுவான் !

வேதனையே ! நீ புரி விந்தைகள் எல்லாம்
ஒன்றா / இரண்டா ? உரைசொல இயலுமோ ?


----------சந்திர கலாதர்

No comments:

Post a Comment