Tuesday, June 21, 2011

O LADY WHO COMES ALONG WITH ME IN MY LIFE.. !

என் இணையாய் என் வாழ்வில் வருபவளே ..!

உயிரற்ற காலைப்பொழுது
உறங்குகின்ற மலைத்தொடர்கள் --

வனப்பில்லா வான்வெளி
காற்றசையாச் சமவெளி--

முடமான முகிற்கூட்டம்
இசைபாடாப் புள்ளினங்கள் --

நகை இழந்த தடாகங்கள்
தடங்கலிடும் ரயில்பாதை--

ஓலமிடும் ஒலிபெருக்கி
ஒளியற்ற தொடுவானம் --

தூங்கியாடும் வண்டிக்காரன்
துயில் காணா வண்டிமாடு --

சோகம் பாடும் தார்ச் சாலை
சோர்வுற்ற என் கால்கள் --

புகை கக்கும் சுமை லாரி
புழுங்குகின்ற என் உள்ளம் --

களைத்திட்ட வழிப் போக்கர்
கனமான என் இதயம் --

ஊளையிடும் ஊர்நாய்கள்
ஊனமான கற்பனைகள் --

சோபையற்ற வேளைதனில்
வழித்துணையாய் எழில் நங்காய் !

நைந்திட்ட இதயமதை
மெல்லிதழ்கள் மின்னலாகா
வாள்போலும் கூர்சொல்லாலே
சல்லடையாய்த் துளைக்காதே !

எழில்விழிகள் மூளலாகாக்
காட்டுத்தீப் பார்வையினால்
மெலிந்த மனத்தினை நீ
கருணையின்றிப் பொசுக்காதே !

சலனமற்ற வேளையினில்
சஞ்சல மனத்துடனே
நெடுந்தூரம் வழி நடக்கும்
அன்பனுக்கு உயிரூட்ட --

மலர் போலும் இத்ழ்களிடைத்
தேங்கி நிற்கும் தேனமுதில்
இதமளிக்கும் இன்சொற்கள்
தோய்த்தெடுத்துச் சுவை ஊட்டி --

அழகான விழிகள் விளைப்
பார்வைக் குளிர்த் தென்றலிலே
அன்புடனே தவழவிட்டு
நெஞ்சத் தடாகத்தின்
நகையற்ற நீர்பரப்பில்
மென்மையாய் வருடிச் சென்று
சலசலக்கும் அலைச் சிரிப்பைத்
தவழவிட்டு வழி நடப்பாய் !

களையற்ற காலையிலே
அறிவுவெளி அயர்ந்துவிட்ட
எண்ண முகிற் பின்னல்களை
விழி மணிகள் துள்ளுகின்ற
பார்வைக் கதிர் முத்தமிட்டு
ஒளிக் கோலம் பல காட்டி
உதயகாலத் தொடுவான்போல்
தகதகக்கச் செய்திடுவாய் !

-----சந்திர கலாதர்

No comments:

Post a Comment