Tuesday, December 11, 2012

கவிதைப் புயல் பாரதி

&

அன்று --
குண்டும் குழியுமாய்
முட்டி மோத வைத்த
தமிழ்ச் சாலையிலே
இவன் --
தீயினைத் தேராக்கி
விழியினை வில்லாக்கி
மின்னலை அம்பாக்கி
இடிகளைச் சொல்லாக்கி
புரட்சி மழையாய்
மடமை இடிக்க வந்தான் !
அடிமைக் குடிமையை
அடியோடு தகர்த்திட
ஆவேசம் கொண்டு
இவன் --
கவிதைப் புயலானான் !

ஆனால் --
இயற்கை தொட்டதும்
இறக்கை விரித்துப்
பூக்கோலம் பூண்டு
தென்றலாய்த் திரிந்திருந்தான் !
குழந்தை முத்தமாய்
தமிழ்ச் சொற்களால்
தழுவி அணைத்திடுவான் !

இவன் ஒருவன்தான் --
நாக்கோடு நெஞ்சையும்
நடையோடு உதட்டையும்
இணைத்துப் பிடித்த
பித்தன் என்றானான் !

அவன்தான் --
பாரதி !
பா ரதி!
பார் அதி 

பாரதி !
இவன் பாக்களோ
அழகு ரதி !

இவன் நெஞ்சிற் சுமந்ததோ
தீ !

இவன் பாடினால்
பார் அதிரும் !

இவனைப்
' பார் அதி 'நேரம் எனக்
கெஞ்சும் நம் விழி !

----சந்திர கலாதர்.
' ப்ரிய ரூபங்கள் '1993
என் கவிதைத் தொகுப்பில் 

No comments:

Post a Comment