மணல் குவியலும் சிறு குழந்தைகளும் உலகமெங்கும் பிரிக்க முடியாதவை ;
மணற்குவியல் ," வா..வா ! " என்று ஒலியில்லா மொழியில் மிகப் பாசமாய்க் குழந்தைகளை அழைக்கிறது.
ஆயிரம் விலை உயர்ந்த விளையாட்டுப் பொம்மைகளையும் மணலையும் குழந்தை முன் வை ;
அது மணலை நோக்கியே பாய்ந்தோடி வந்து தொப்பென அதன் மீது வீழ்ந்து மகிழும் . மணலில் சிறுகை செருகி ,இறைத்து ,தூற்றி ,அளைந்து,குவித்து ,தோண்டி ,மறைத்து ,உருண்டு ,பிறண்டு,சிந்தி, சிதறி ,கொட்டி, வாரி --
தனக்குத் தானே பேசி ,தன் விளையாட்டைத் தானே உருவாக்கி ,பசி மறந்து ,தாயும் மறந்து ,அதிலேயே தூங்கியும் போகும் எனின் ,இந்த மணலின் மகிமையை என்னென்பது !
மணலில் எழுதாத விரல்கள் உலகில் உண்டோ ?
மணலில் பதியாப் பாதங்கள் உண்டோ ?
மணலில் குதியாத நெஞ்சமும் உண்டோ ?
மணலில் குழந்தை ஆகாப் பெரியோரும் உண்டோ ?
மணலில் மஞ்சம் காணா மனமும் உண்டோ ?
மணல் ஒரு மந்திரம் ; புரியாத தந்திரம் !
மணல் மேட்டில் எது வீழ்ந்தாலும் அது குழந்தையாய்த்தான் எழும் !
-------சந்திர கலாதர்.
No comments:
Post a Comment