மதுரையில் என் இரு அண்ணன்களின் வீடு ;
பெரியவர் கீழே ; இளையவர் மேலே.
விருந்தினனாய் என்றோ வந்து போகும் தம்பியாய் நான் -
வீட்டின் வெளிப்புறமும் உட்புறமும் நன்கு ' விறு விறு 'துடைத்து மெருகேற்றியதுபோல் ஒரு பளபளப்பு .
மார்கண்டேயன்போல் நிரந்தரமான ஒரு தூய்மை -
ஏன் ,இந்த வீட்டிற்குள் மட்டும் தூசி படை எடுப்பதில்லை ?
என்றும் நீங்காத வியப்பு எனக்கு .
ஒருங்கிணைந்த உடற்பயிற்சி [ mass drill ] வகுப்பில் திறந்த வெளியில் பள்ளி மாணவர்கள் ஒழுங்காக நிற்பார்களே ,அதுபோல் ,சுற்றுக் கம்பிப் பின்னலுக்குள் செடிகளும் ,மரங்களும் அழகாக ,தூய்மையாக நிற்பதைப் பார்த்து ரசிக்கிறேன் .
வீட்டின் வெளியில் அழகிய கோலம் 77 வயதிலும் தளராத அக்கா விசாலத்தின் கைங்கரியம் -
அக்கா , தலை வணங்குகிறேன் .
செடி கொடி,மரங்களின் பசிக்கு ,அவை உடல் சோர்ந்து கேட்காமலேயே ,விடிகையிலேயே தேவை அறிந்து பாதங்களை நனைக்கும் நீர் .
இவை எல்லாமே ஆறு மணிக்குள் முடிந்து விடுகின்றன .
இவற்றுக்கெல்லாம் சாட்சியம்போல் கோயில் மணி ஓசையைவிடப் பலமாக அதிர்வுகள் எழுப்பும் குயிலின் அங்கீகாரமும் ஏற்பும் .
தலை மேலிருந்து வில்வ மரத்தின் அடர்வின் புதையலுள் ..சனியனே ,எங்கிருந்து காதைக் கிழிக்கிறாய் ? கழுத்தை ஒடிக்கிறாய் ? கண்ணை வலிக்கிறாய் ?கத்தித் தொலைகிறாய் ?
பின் வீட்டினுள் அண்ணனின் குழாய் அடிப்புகள் , " டங்கு டங்கு " என்று சீராக ...குடி நீருக்காக -
பின் நெடிய துடைப்பானை ,மெழுகானை எடுத்துக் கொண்டு வீட்டின் மூலை முடுக்குகள் எல்லாவற்றையும் ஈர மெழுகல் .
கீழ் வீட்டிற்குள் பார்வை படர்ந்தால்...அலமாரிகளில் ,சமையல் அறையில் நாளிதழ் விரிப்பின் மீது அழகாக நின்று கொண்டிருக்கும் ' பள பள ' பாத்திரங்கள் .
நாளிதழ் விரிப்புகளும் அழுக்கின்றி எண்ணெய்ப் பசையின்றி வெகு தூய்மையாய் ...
எப்படி ..எப்படி முடிகிறது ? எப்படிக் கூடும் ?
வீடே தூய்மை பேசுவதானால் ...நம்ப முடிகிறதா ?
இதுதான் ஈடுபாடு [ devotion ]!
நம் கால் அழுக்கு தரையைக் கறை கொள்ளச் செய்துவிடுமோ என நுனிவிரல் தாங்கி நடனமிடச் செய்கிறது நம்மை .
என் அண்ணனுக்கோ வயது 75.
முதுகுத் தண்டு வயிற்றினை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டுவிட்ட தோற்றம் .
உணவின் வரவு செலவுக் கணக்கில் செலவே மிகை ஆயின் இப்படி ஆகுமோ ?
உழைப்பு , உழைப்பு , உழைப்பு !
தலை வணங்குகிறேன் அண்ணன் சுப்பிரமணி அவர்களே !
மேல் வீடு செல்கிறேன் -
சிறிய அண்ணன் சங்கரநாராயணன் இல்லம் -
சற்று அடைசலாக உள்ளது ..சற்று என்ன , மிகவே !
எங்கு பார்த்தாலும் ,சுவரிலும் , அலமாரிகளிலும் ,பீரோக்கள் ,குளிர்ப் பெட்டி மீதும் ,எங்கெல்லாம் ஒட்டிக்கொள்ள முடியுமோ அங்கெல்லாம் அடைசலாய் சிறிதும் பெரிதுமாய் அலங்காரப்பொருட்கள் !
அடைசலாய் இருந்தும் அதுவே தெரியாது அழகாய் ..கண் உறுத்தாமல் ,தூய்மையாய் ,கலா வண்ணமாய் !
ஒரு சிற்பி உன்னுள் இயங்கிக் கொண்டு இருக்கிறான் அண்ணனே !
ஒரு கணினியின் ' சுண்டெலி'யைக் கூட அவன் விரல்கள் ஆமை ஆக்கிவிடுகின்றனவே !
மக்காச்சோள இதழ்களைக்கூட சுந்தர மயமாக்கி விடுகின்றனவே !
அசந்து போகிறேன் !
தேவையற்ற கண்ணாடித் தகடுகள் வண்ண ' ஓவியம் தாங்கிகள்' ஆகிவிடுகின்றனவே !
எத்தனை எத்தனை கடவுள் படங்கள் பொம்மைகள் நீக்கமற நிறைந்து ...ஒவ்வொன்றைப் பார்பதற்கே ஒரு நாள் ஆகும் போலிருக்கிறதே !
இங்கேயும் தூசியின் ஆதிக்கம் இல்லை !
ஒரு படைப்பாளியின் விஷமத்தனங்கள் ,சேட்டைகள் எங்கணும் !
வீட்டு முன் முற்றத்தில் குடிகொண்டிருக்கும் சிறு பிள்ளையாருக்கு காலையில் வழிபாடு இவர் தம் கடமை ...முடிந்தபின் வீட்டினுள் நிறைந்திருக்கும் அத்தனை தெய்வங்களுக்கும் அலங்காரம்,ஆராதனை எல்லாம் ...எப்படி தினமும் முடிகிறது ?
ஒரு நாள் விளக்கு ஏற்றினால் ஒரு மாதம் என் வீட்டுப் பிறைத் தெய்வங்களை நான் இருட் சிறை தள்ளி விடுகிறேனே!
பின் சமையலில் கைதேர்ந்ததால் மிகப் பக்குவமாய் அண்ணியாருக்கு மறு கையாய் !
எல்லாவற்றையும் மீறி அன்பே வடிவாய் , பாச மூர்த்திகளாய் இருவரும் என் குழந்தைகளுக்கு
கேட்டுக் கேட்டு ,என் அன்னையை நினைவூட்டுவதாய்ப் பரிமாறியது.
சிறிய அண்ணனே ,தலை வணங்குகிறேன் !
நல்ல பயணம் - என் குழந்தைகள் ஏதாவது பாடம் கற்றுக் கொண்டிருந்தால் தம் இல்லத்தை இனியாவது தூய்மையாக வைத்துக் கொள்ளுவார்களா ?
----சந்திர கலாதர்
No comments:
Post a Comment