Monday, April 15, 2013

கவிதை என்னுள் இளம் வயதில்
எட்டாத தொலைவில் மறைவாய் நின்று
மெலிதாய் 'வா வா ' என்று அழைத்ததோ ?
பசிய மண்ணும் நெடிய விசும்பும்
காற்றும் மழையும் மரமும் புள்ளும்
நானே அறியாது தோழமை கொண்டவோ ?
வாலிப வயதில் முச்சந்தியில் முட்ட
படிப்பு , ஓவியம் ,கவிதை கைகாட்டிகள்
பாவம் என்னை வெகுவாய்க் குழப்பின -
படிப்பைத் தேர்ந்தேன் ஒருவாறு முடித்தேன்
விடாது தொடர்ந்தனள் ஓவியப் பெண்ணாள்
அவள் மையலில் வீழ்ந்தேன்
மடியில் கிடந்தேன் கனவுகள் பொரித்தேன்
காகிதம் சுவர் என வண்ணத்துள் திளைத்தேன்
ஓவியம் காதலில் களைத்தாள்
கவிதையாள் குரல் நெருக்கமாய்க் கேட்டது
அவள் இலக்கண நகை கண் கூசியது
நகைதனை நீக்கி நகையோடு வா என்றேன்
அப்போதுதான் அவள் முழு நிலவானாள்
உன் அழகு நான் இல்லை, எப்படி என்றேன் ?
தரிசாய்க் கிடக்குதே என் மனம் என்றேன்
எங்கிருந்தோ ஏதோ என்முன் குவித்தாள்
கூர் முனை ஏர்களாய் உலகக் காவியங்கள்
பட்ட நிலத்தை பொன் ஏர்களால் கீறினேன்
உயரிய கருத்தை உரமாய் இட்டேன்
கற்பனை கொண்டு ஈரப் படுத்தினேன்
உண்மையை தேடி விதைகளாய் இட்டேன்
நம்பினால் நம்புங்கள் இது சத்தியம் ஆகும்
முதல் ஓர் கவிதை கோர்க்கும் முன்பு
ஓர் பத்தாண்டுக் காலம் ஓராயிரம் நூல்கள்
ஓர்ந்து படித்தேன் மகிழ்ந்து கற்றேன் .
ஓர் கவிதையும் கூட பிறர் படைத்தன
மிஞ்சாது போயினும் தாழாது என்ற உறுதியில்
ஒவ்வொன்றாய் என் படைப்புகள் கண்டேன்
நானே இலக்கணம் மீறிய படைப்பு என்பதால்
உணர்வை முன்வைத்தே கோலங்கள் எழுதினேன்
அழுதேன் சிரித்தேன் கலங்கினேன் குழம்பினேன்
வெற்றுக் கூச்சல் வெகுவாய் வெறுத்தேன்
கொஞ்சம் கொஞ்சமாய் குவிந்தன எழுத்துக்கள்
ஒன்று இரண்டு நூல்களும் ஆயின
நொண்டிக் கால்களைக் கடன் கேட்கவில்லை
என்னுரை மட்டுமே என்னோடு நடந்தது
உள் ஆசை ஒன்று தீயைக் கனன்றது
இவன் கவிஞன் என்று பிறிதோர் கவிஞன்
குறிப்பிடக் கேட்கக் கொள்ளாத ஆசை
பாவலன் என்றும் சொல்லக் கேட்டேன்
இருப்பினும் என் ஆங்கிலப் படைப்பை
ஒரு ஆங்கிலக் கவி மெச்சக் கேட்க
தணியாத தாகம் ; பொல்லாத ஆசைதான் !
ஓ ஓ ! அவையும் மெதுவாய் என் கரை சேர்ந்தது
'sweet poet ! brilliant poet !' என்பன எல்லாம்
என் கவிதைக் காதலின் பரிசெனக் கொள்வேன் .
ஆம் ,இதனை அடைய எத்தனை தூரம்
தளரா நடை தனி வழி சென்றேன் !
&
ஒன்றை மட்டும் நினைவில் செதுக்கினேன்
இது இயற்கை அளித்த பிச்சை ஆகும்
என் திறம் என்பது எதுவும் இல்லை !
கவிதை என்பது காற்றாய் வருவது
பலூனுள் ஊதி அடைப்பது அல்ல !
---சந்திர கலாதர்
15.04.2013 / திங்கள் / சித்திரை 2 / விஜய
இரவு மணி 11.

No comments:

Post a Comment