வாலிபம் மனதுள் விளையாடும்
தனிமை விளையாட்டுத்தான்
எத்தனை எத்தனை சலிக்காமல் ஓயாமல்--
பார்க்கும் பெண்ணை எல்லாம்
விழியுள் இழுத்து கைபிடித்து
காற்றிலே நிலவிலே வாரி அணைத்து
காதல் பரவசக் கவிதை மொழி பெய்து
முத்தங்கள் சூடாய் இமைகள் இட்டு
கற்பனைகள் அடைகாத்து காவலிருந்து
காமத்தில் அரவம் என அவள் இறுக்கி
வியர்த்து விறுவிறுத்து தானே திரவமாகி
ஆவியாகி சிறகெடுத்து விண் நுழைந்து
மாயை என்றுகூட நம்ப மறுத்து
மூடிய விழிகளுள் இளமை வாழ்ந்த காலம்
இன்றெங்கே போனதுவோ இறந்ததுவோ ?
இளமைச் சூடிறங்கிப் போனதுமே சடலமானேன்--
கடந்ததுள் மறுபடி நுழைந்தால்
வரிசை வரிசையாய் அந்தப் பெண்கள்
அதே இளமை மிடுக்கும் செருக்குடன் ;
என் மனதுள் அவர்க்கு என்றும் இளமை வரம் ;
நானோ வெண்தாடி நரை திரை மூப்புடனே !
பெண் பித்து ஏறாத ஆண்மனம் உண்டுதானோ ?
காமம் கலவாத காதலும் உண்டுதானோ ?
யுகங்கள் எத்தனை உருண்டாலும் புரண்டாலும்
ஆணின் தவறாத முடியாத தணியாத ஆய்வு
பெண் என்னும் பொன்னான புதிரே !
---சந்திர கலாதர்
No comments:
Post a Comment