Wednesday, November 23, 2011

a golden pen

இருபதாயிரம் ரூபாயில் ஒரு பேனா !
&

பொன்மீது இதுவரை ஆசையே கொண்டேன் அல்லன்

ஒரு மோதிரமும் என் விரல் சுமந்ததில்லை வாழ்நாளில் -

பெண்ணைப்போல் பொன் தண்டவாளம் கழுத்திலே கையிலே

சுமக்கும் பெட்டை ஆண்களைப் பார்த்து நகைப்பதுண்டு-

என்ன நினைத்தானோ என் மகன் ? தண்டிக்க நினைத்தானோ?

எழுதியவண்ணம் எப்போதும் இருக்கிறானே என எண்ணி

"அப்பா ! இதோ என் பரிசு !" என ஓர் சிறு பெட்டகம் தந்தனன் ;

பரிசுகள் மீறிய வயசு மனமின்றி அசட்டையாய்த் திறந்தது;

உள்ளே குள்ளமாய் ஒரே ஒரு பேனா மஞ்சளும் வெள்ளையுமாய் -

வேறு உள்ளே உள்ளதா என மனம் கலைத்துப் பார்த்தது -

அவசரமாய் மகன் அணுகி சிறப்பு மை ஊற்றித் தந்து

"அப்பா ! இதை என் பணத்தை திருப்பித் தருவதுபோல் வேண்டாம் ;

இதன் விலை இருபது ஆயிரம் ரூபாய் ;' வாட்டர்மேன் ' பேனா இது

தங்கம் இழைந்தது ஆசையாய்த் தருகிறேன் " என்றனன் -

அதிர்ச்சியில் இதயம் வெளியில் குதித்து மயங்கிப் போனது ;

இதை நான் கேள்விப்பட்டதுகூடக் கிடையாதே;

இதில் எழுதக் கூட என் மனம் ஏற்காதே ;

ரூபாய் ஐந்தைத் தாண்டி பேனா வாங்கப் பொறாத வயதாயிற்றே !

அவன் கட்டளையில் என் பெயர் எழுதிப் பார்த்ததோடு சரி

பேனாவைப் பெண்ணைப் போல் திரைமறைத்து உள் வைத்தேன்

தங்கமே எனைத் தீண்டாதே என் தவம் கலைக்காதே

என்று சொல்லவா முடிகிறது ? என் தொழில் எழுத்தாயிற்றே !

எழுதினால் சொல் எல்லாம் பொன்னாகவா பூக்கப் போகிறது ?

உள்ளிருப்பது என் ஏழைத் தோழன் வல்லமை 'மை' தானே !

என்றும் போல் என் எழுத்துக்கள் மண் ஈரம் மனஈரம் மலர்த்தும் !

-----சந்திர கலாதர்

No comments:

Post a Comment