இயற்கையும் நானும்
&
குல்மோஹார் மலர்கள் ஓய்ந்து விட்டன ..
எண்ணி ஒன்றிரண்டே மலர்களும் மொட்டுகளும் ;
ஆனால் ஒளி தெறிக்கும் பசுமையில் மயிற்தோகைபோல் இளந்தளிர்கள் ..
கடைசி மலர்கள் ஏதாவது தனிமைச் சோகத்தில் தவிப்பனவோ ?
எதிர் வீட்டில் செண்டு செண்டாய் அடர்ந்த வேப்ப மகிழ்வுகள் !
ஒளியும் நிழலும் கைகோர்த்து உன்னத மாயைகள் ஜனிக்கும் பிரதேசங்கள் !
இதுவென்ன இளந்தளிர் மாதமோ ?
முருங்கை மரங்கள் வெண் நக்ஷத்திரங்களை அதன் பிரபஞ்ச வெளியில் கொட்டி வைத்துள்ளன .
காலைக் குளிர்வு ..வான் முகடுகளில் புரட்டாசி மழைக் கனவு மந்தைகள் .
உயரே வட்டமிடும் இலக்கற்ற ஹெலிகாப்ட்டர் தட்டாரப் பூச்சிகள் .
உயர உயரப் பறந்து இப்போது கிழிந்த கனவுகளாய் மரங்களில் சிக்கிய பட்டச் சிதைவுகள் கறைகள்போல்.
குயில்களின் தொண்டைகள் ஒட்டிக் கொண்டனவா ?
அவை கூவித் தேயத் தேவை வசந்த இளவரசனா ?
தடமே தெரியாது எங்கே இப்போது பதுங்கிக் கொண்டன ?
'விழுந்த இடத்தில் வாழ்ந்து விடு ' --என்ற சேதியை இந்த வேப்ப அரச மரக்கன்றுகள் கற்பிக்கின்றன .
என்ன நம்பிக்கை தைரியத்தில் அடுக்கு மாடிக் கட்டிடச் சுவர் இண்டு இடுக்குகளில் முளைத்து
நிற்கின்றன ?
செங்கல் சுவர்களில் என்ன வாழ்வாதாரம் ?
எனினும் சோகித்து ஸ்தம்பித்து நிற்கவில்லையே !
எவரும் பாராதவரை வாழ்ந்து விடுவோம் எனும் துணிச்சலா ?
----சந்திர கலாதர் ...13.10.2011...காலை 06.45 மணி
--
No comments:
Post a Comment