Saturday, August 6, 2011

O DAWN ! BLOSSOM GRACEFULLY IN SOFT DRIZZLE !

காலையே ! மென் தூறலில் வளர்வாயே
[ மழைக் காலம் அதன் தளர்நடைப் பிஞ்சு மொழிப் பருவத்தில் ]

&

தூறல் நனைத்திடக் குளிர்

தென்றல் உலர்த்திடக்

காற்றில் உலர்ந்ததைப் பூஞ்

சாரல் நனைத்திடக்

காலையே மலர்வாயே இளங்

காலையே வளர்வாயே !

&

நீர்முகில் நிறைந்திடப் பனிக்

கற்பனை சொரிந்திடத்

தளிர்க்கொடி துள்ளிட என்

உள்ளமும் குதித்திடக்

காலையே மலர்வாயே கவின்

காலையே வளர்வாயே !

&

மங்கிய வெளியினில் இசைப்

பறவைகள் குழைந்திடக்

கவிதை மொழிகளால் கொல்

துயரம் பறந்தோடக்

காலையே மலர்வாயே குளிர்க்

காலையே வளர்வாயே !

&

மென்மழைச் சாரலில் இள

மேனி சிலிர்த்திட

இதய கீதங்கள் பசும்

மனவெளி நனைத்திடக்

காலையே மலர்வாயே மழைக்

காலையே வளர்வாயே !

&

தென்னைகள் கூடி ஓர்

தெம்மாங்கு பாடிட

நெஞ்சச் சோலை தன்

இளமலர் சொரிந்திடக்

காலையே மலர்வாயே எழிற்

காலையே வளர்வாயே !

&

கதிர்களை ஒடுக்கியே செங்

கதிரவன் எழுந்திட

மன விசாலத்தில் ஓர்

இள நிலா பூத்திடக்

காலையே மலர்வாயே பூங்

காலையே வளர்வாயே !

&

உயிர்த் துடிப்புடன் இன்ப

உலகம் விழித்திட

வாழும் ஆசையில் என்

உள்ளமும் விம்மிடக்

காலையே மலர்வாயே தேன்

காலையே வளர்வாயே !

&

காலையே மலர்வாயே அன்ன

நடையினில் வருவாயே !

தூறலில் வளர்வாயே பூந்

தென்றலில் நகைப்பாயே !

கற்பனை விரிப்பாயே எனைக்

காதலில் நனைப்பாயே !

&

-----சந்திர கலாதர்

No comments:

Post a Comment